கூட்டுப்பாலியல் விவகாரம் : எதிர்ப்பு வலுத்ததால் வழக்கு பதிந்த போலீசார்!!
திண்டுக்கல் : பழனி வந்த கேரள பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் வாங்க மறுத்த பழனி காவல் நிலைய போலீசார் எதிர்ப்புகள் எழுந்ததால் 2 பிரிவுகளில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் 19ஆம் தேதி பழனி கோவிலுக்கு கணவருடன் வந்த கேரள பெண்ணை கடத்திய் மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக பெண் மற்றும் அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
ஆனால் புகாரை ஏற்க பழனிகாவல்நிலையம் மறுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் மருத்துவர் விசாரிக்கையில், நடந்த சம்பவத்தை கேட்டு உடனே கேரள போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கேரள டிஜிபி இது தொடர்பாக தமிழக டிஜிபியிடம் கடிதம் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பழனி காவல் நிலைய போலீசார் 2 பிரிவுகளில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளிபிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :- கேரள பெண் பழனிக்கு வருகை தந்தபோது கற்பழிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் மற்றும் கூட்டுக்கற்பழிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக பெண் காவல்ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேரடி கண்காணிப்பில் இந்த குழு செயல்படும் என்று எஸ்பி ரவளிபிரியாவின் கூறிய நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும் கேரள பெண் கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பான வழக்கில் கேரள போலீசாருடன் இணைந்து முழுவிசாரணை செய்வோம் என்றும் தெரிவித்தார்.