லியோனிக்கு கல்தா கொடுத்த ஸ்டாலின்…? கைமாறும் தமிழக பாடநூல் நிறுவன தலைவர் பொறுப்பு..!!
சென்னை : கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தமிழக பாடநூல் கழகத்தின் தலைவர் பொறுப்பை திண்டுக்கல் லியோனிடம் திரும்பப் பெற முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆகிய காரணங்களால் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், எம்பி அன்புமணி ராமதாஸ், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்களை இழிவுபடுத்தி பேசும் ஒருவரை இப்பதவியில் அமர்த்துவதைவிட, அந்த பதவியை மோசமாக அவமதிக்க முடியாது என்றும், பாடநூல் நிறுவனத் தலைவர் என்ற புனிதமான பதவியில் இருந்து லியோனியை நீக்கிவிட்டு, தகுதியான கல்வியாளர் ஒருவரை அரசு அமர்த்த வேண்டும், என அவர் வலியுறுததினார்.
இதேபோல, நடிகை கஸ்தூரியும், ஐ.லியோனியை விட ஒரு அருமையான தேர்வு இருக்க முடியுமா என கூறிவிட்டு, இனி திமுக வரலாறு தொடர்பான பள்ளிப் பாடங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்றும், ஃபிகர்ஸ் போன்ற வார்த்தை கையாடல்களும் பாட புத்தகங்களில் இடம் பெறலாம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, லியோனிக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தாலும், இன்னும் அவர் முறைப்படி பதவியேற்கவில்லை. மேலும், தன்னை நியமனம் செய்த முதலமைச்சரிடம் ஆசி பெற்ற பிறகு பொறுப்பேற்றுக் கொள்ள நினைத்த லியோனி, இதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், முதலமைச்சர் தரப்பில் இருந்து கொஞ்சம் காத்திருக்குமாறு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலையான பிறகும் லியோனிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அவர் பதவியேற்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால், லியோனி மேற்கொண்டு தமிழக பாடநூல் நிறுவன தலைவர் பதவியை வகிப்பாரா..? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.