லஞ்சம் கேட்டால் சிறைதான்” - கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர் மஸ்தான் எச்சரிக்கை!
விழுப்புரம் வடக்கு மாவட்டம் வல்லம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் அதிமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஏற்பாட்டில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை பார்த்து தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்தியாவிலேயே கொரோனா கால நிவாரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாயும் 14 வகை மளிகை தொகுப்பினை வழங்கியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வழிகாட்டுதலோடு மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக நடத்துகின்ற அரசு என பெருமையோடும் சொல்லுகின்ற வகையிலும் வெளிப்படைத் தன்மையோடு ஆட்சி நடத்துகின்ற திமுக அரசில் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு எந்தவித செலவு இல்லாமல் கிடைக்கும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதிபட தெரிவித்தார்.
பத்தாண்டு காலமாக தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் செய்த அதிமுகவினர் அதை மறைக்க போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் கேட்கும்போது கூட்டுறவு சங்கத் தலைவர்கள் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாக சிறைச் சாலைக்கு அனுப்பப்படுவார்கள்.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தென்பெண்ணை ஆற்றில் கட்டிய தடுப்பணை 30 நாளில் அடித்து சென்றது. வெளிப்படை தன்மையான ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்துக் கொண்டு உள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுகவினர் போராட்டம் என்ற போர்வையில் கரைந்து கொண்டு உள்ளனர்.
இன்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதை வரவேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகம் அடித்தட்டு மக்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு உண்மையாக உழைக்கின்ற இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.