தலித் ஊராட்சி தலைவர் கண்ணீர் மல்க கலெக்டரிடம் புகார்!
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் மேல செம்மங்குடி ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான குளத்தை இந்து சமய அறநிலையத்துறை சொந்தம் கொண்டாடுவதாகவும், இதன் பின்னணியில் ஒரு தரப்பினர் தூண்டுதல் இருப்பதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
‛‛தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் மேல செம்மங்குடி ஊராட்சியில் பெண் தலித் ஊராட்சி தலைவராக நான் வெற்றி பெற்றுள்ளேன். இதனை ஏற்க முடியாத ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் என்னையும், எனது மகனையும் ஆதிக்க சாதியினர் தாக்கினர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் எனது மகன் மீது பொய் வழக்குப் போட்டு போலீசாரின் உதவியுடன் ரவுடி பட்டியலில் இணைத்து உள்ளனர். இதனால் எனது மகனின் திருமணம் தடைபட்டுள்ளதுஇந்த நிலையில் எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் பேரில், நானும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவரும் நேரில் விசாரிக்கச் சென்றபோது அங்கிருந்த அந்த தரப்பினர் எங்களை வழிமறித்து விசாரிக்க கூடாது என மிரட்டினார்கள். ஊராட்சியின் வருமானத்தை பெருக்குவதற்காக ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நோக்கில் நடவடிக்கை எடுத்தபோது, ஊராட்சிக்கு சொந்தமான குளத்தை அறநிலையத்துறை ஆக்கிரமித்து தொடர்ந்து குத்தகைக்கு விட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் மனு அனுப்பி குளத்தை ஊராட்சி வசம் ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தநிலையில், இன்று 26 ஆம் தேதி மாலை அறநிலையத்துறை குளத்தை ஏலம் விடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் பின்னணியிலும் அந்த தரப்பினர் உள்ளனர்.ஊராட்சி பணிகளை சுதந்திரமாக செயல்படுத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் ஆதிக்க சாதியினரால் எனக்கும் என் குடும்பத்துக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதால் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் மேலும் இதுபோன்று தொடர்ச்சியாக ஊராட்சியில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் தடுத்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதனால் எவ்வித மக்கள் நல பணியையும் தொடர்ச்சியாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக செயல்படுத்த முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலர் வெற்றி பெற்று உள்ள நிலையில், அவர்கள் தங்களது பணிகளை செய்ய முடியாமல் பலர் தடுத்து வருவதாக கூறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு தமிழ்நாடு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் வேண்டுகோளாக உள்ளது.