ரூ.1000 உதவித்தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு - ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் தேவையில்லை
பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவர்களை மாற்ற தேவையில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அந்த உரையில், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு நிதி ரூ.48.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் உள்பட ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மிக முக்கியமானது.
குடும்பத் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவி கிடைக்கும் என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. உரிமைத் தொகை திட்டத்தை பெற ரேசன் கார்டுகளில் குடும்பத் தலைவர்களை மாற்ற வேண்டியது இல்லை. பெண்கள் உரிமைத் தொகை திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கானது ஆகும். ஏழை மக்களுக்கு அடிப்படை உரிமைத்தொகை செல்வதை உறுதி செய்ய அளவுகோல் வகுக்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வழங்கப்படும். பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.3ம் பாலினத்தவர் ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ரூ.4142.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”என்று கூறினார்.
கொரோனா பெருந்தொற்று பேரிடருக்கு நடுவே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் கொரோனா முதல் அலை பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதனால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி பாதிப்புகள், வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என பல்வேறு சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் தீர்வு கிடைக்குமா என மக்கள் புருவம் உயர்த்திக் காத்திருக்கின்றனர்.
நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21-ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.