ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.3000, ஒரு பிளேட் சாப்பாடு ரூ. 7400:நம்பினால் நம்புங்கள்; ஆப்கானில் அவல நிலை

 





ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்தே நாட்டிற்குள் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகிறார்கள். வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என்பதால் மக்கள் பலர் விமான
நிலையத்தில் கூடி வருகிறார்கள்.

ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும். அதன்பின் ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகள் நடக்க வாய்ப்பு குறைவு. கனடா ஏற்கனவே இன்றோடு தனது மீட்பு பணிகளை காபூலில் முடித்துக்கொண்டது.

ஒரு பக்கம் மக்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் நிலையில் இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாக சரிந்துள்ளது. அங்கிருந்து மக்கள் வெளியேறிவிட்டதால் பல அடிப்படை பணிகளை செய்ய ஆட்கள் இல்லை. இன்னும் பல இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. அதோடு அரசின் நிதித்துறை இன்னும் செயல்படவில்லை. பல நிதித்துறை அலுவலர்கள் பணிக்கு திரும்பவில்லை

நிதித்துறை பணியாளர்கள் பலரை மீண்டும் வேலைக்கு வரும்படி தாலிபான்கள் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார பணிகள் முடங்கி உள்ளது. பல்வேறு மாகாணங்களுக்கு இன்னும் நிதி சென்று சேரவில்லை. பல கவர்னர்கள் பதவியில் இருந்து விலகிவிட்டனர். பல மாகாணங்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானில் அனைத்து பணிகளும் சிக்கலை சந்தித்துள்ளது. இது தற்போது அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் எதிரொலித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. முக்கியமாக ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் அமெரிக்க மதிப்பில் 40 டாலருக்கும், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. ஒரு பிளேட் சாப்பாடு ரூ. 7400க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழங்களின் விலையும், ஒரு லிட்டர் பாலின் விலையும் 2000 ரூபாய்க்கும் அதிகமாக சென்றுள்ளது.

பொருளாதார பணிகள் நடக்காத காரணத்தாலும், கடைகள் திறப்பு, உணவு பொருட்கள் வரத்து இல்லாத காரணங்களாலும் விலைவாசி உயர்ந்து இருக்கிறது. பொருட்களின் கையிருப்பு குறைவாக உள்ளதால் விலை அதிகரித்துள்ளது. அந்த நாட்டின் பொருளாதாரத்தை இது மிக மோசமாக பாதித்து இருக்கிறது. கடந்த சில வருடங்களாகத்தான் ஆப்கானிஸ்தான் பொருளாதார ரீதியாக கொஞ்சம் முன்னேறி வந்தது. ஆனால் தாலிபான்களின் வெற்றி மீண்டும் அந்த நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கி உள்ளது

இதனால் மக்கள் பலர் உணவகங்கள், மளிகை கடைகளில் கூட்டம் கூட்டமாக நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தாலிபான்களின் வெற்றியால் பல லட்சம் பெயர் நாட்டிற்கு உள்ளேயே வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். இதுவும் விலை ஏற்றத்திற்கும், நிலையற்ற தன்மைக்கும் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அந்த நாடு விரைவில் மீண்டு வர வாய்ப்பு இல்லை. தாலிபான் அரசு முழுமையாக ஆட்சி அமைத்து, புதிய அமைச்சர்கள் பணிகளை துவங்கிய பின்பே பொருளாதார ரீதியாக மீண்டும் அந்த நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்