ஹவாலா கும்பலை சேர்ந்தவரா? ரயில்வே போலீசார் விசாரணை..
ஆந்திராவிலிருந்து காட்பாடி வந்த ரயிலில் , உரிய ஆவணங்களின்றி சேலம் வெள்ளி வியாபாரி எடுத்து வந்த சுமார் 17 கிலோ வெள்ளி கட்டிகள், மற்றும் ரூ.4.25 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர் போலீசார். மேற்குவங்க மாநிலம் புரூலியாவில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற புரூலியா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று வழக்கம்போல் வேலூரை நோக்கி வந்து கொண்டிருந்தது .
அப்போது, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு , புரூலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் , ஒரு பயணி, வெள்ளிக் கட்டிகள் மற்றும் , பல லட்சம் மதிப்புடைய ரொக்கப் பணத்தை வைத்துக் கொண்டு எஸ் - 5 கம்பார்ட்மெண்டில் பயணம் செய்வதாகவும் , அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்தது .
நேற்று பிற்பகல் 3 மணியளவில் வாலாஜா ரயில் நிலையம் அருகே புரூலியா விரைவு வண்டி ரயில் வந்து கொண்டிருந்த பொழுது, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான காவலர்கள் எஸ்-5 பெட்டியில் சோதனையிட்டனர் , அப்போது அந்த பெட்டியில் பயணித்த சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 40 ) என்பவரின் உடைமைகளைச் சோதனை செய்தனர் .
சோதனை செய்ததில் , அவரது கைப்பையில் , 16 கிலோ 950 கிராம் எடையுள்ள வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.4.25 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது . மேலும் ரவியிடம் விசாரணை செய்த பொழுது அவர் சேலத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியென்றும் அவர் வியாபாரத்திற்காக வெள்ளிக் கட்டிகளை எடுத்துச் செல்வதாகவும் , வெள்ளி வாங்கிய மீதி பணத்தை , கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார் .
எனினும் , காவல்துறையிடம் அவர் கொண்டு செல்லும் வெள்ளிக்கட்டிகள் மற்றும் பணத்திற்கு ,உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால், இவர் ஹவாலா கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் , அவரை கைது செய்ய முடிவு செய்தனர் .
அதற்குள் புரூலியா ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் , வாலாஜாவில் இருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில்வே நிலையத்துக்கு வந்தது. இதனால் அவரை காட்பாடி ரயில்வே நிலையத்தில் இறக்கி அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கட்டிகள் , மற்றும் ரொக்கப் பணத்தின் மொத்த மதிப்பு , சுமார் 20 லட்சத்தை தாண்டும் என்று தெரிவித்துள்ளனர் .
கடந்த மாதம் இதே போன்று சேலத்தைச் சேர்ந்தவர்கள் ரயிலில் கடத்திச் சென்ற 150 கிலோ வெள்ளி, 30 லட்சம் ரூபாயை காட்பாடியில் காவல்துறை பறிமுதல் செய்து ஐந்து பேரைக் கைது செய்தனர். தற்போது அதே போல மீண்டும் நடந்துள்ளதால் அவாலா கும்பலை சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.