நடை பாதை ஆக்கிரமிப்பு: ஆட்சியர் அலுவலகம் முன் பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி…!!
திண்டுக்கல் அருகே பொதுப்பாதையில் நடப்பதற்கு சிலர் தடை விதிப்பதாக கூறி பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கூவாக்காபட்டியைச் சேர்ந்தவர் பத்மபிரியா. இவர் இன்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
இதை பார்த்த போலீசாரும் அருகில் இருந்த பொதுமக்களும் இவர்கள் தலையில் தண்ணீரை ஊற்றி இவர்களை காப்பாற்றினர். இதனையடுத்து,தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். இதுகுறித்து பத்மபிரியா கூறியதாவது,
எங்களுக்கு சொந்தமான வீடு கூவக்காபட்டியில் உள்ளது. நாங்கள் நடந்து செல்லும் பொது பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துதள்ளார். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் நான் புகார் செய்தேன். புகார் அளித்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த இடம் பொதுப்பாதை என அறிவித்தனர். இருந்தபோதும் ஆக்கிரமித்துள்ளவர் வழியை திறந்து விட மறுக்கிறார்.
நான் அடுத்தவர் இடத்தில் நடந்து செல்லும்போது அவர் குடித்துவிட்டு என்னிடம் தகராறு செய்கிறார். சில நேரங்களில் எங்களை தாக்குகிறார்கள். தினமும் என்னை வந்து அடிக்கிறார். நான் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் தாக்கப்படுகிறார்கள். நான் நடந்து செல்வதற்கு முடியாமல் வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நாங்கள் வாழ்வதைத் விட சாவதே மேல் என்று கூறி இங்கே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்தோம்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தில் பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். ஆட்சியர்ர் எங்களுக்கு நல்வழி காட்ட வேண்டும், என்றார். இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.