மாஸ்க் போட சொன்ன அரசு மருத்துவர் மீது சரமாரி தாக்குதல் : இளைஞர்கள் வெறிச்செயல்!!
தமிழக-கேரள எல்லையில் அரசு மருத்துவமனைக்கு வந்த வாலிபரிடம் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்திய அரசு மருத்துவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக எல்லையை யொட்டி கேரளா மாநிலத்தின் பாறசாலை பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு வந்த இளைஞர் ஒருவரிடம் முகக் கவசம் அணியுமாறு அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் சஞ்சு கூறினார்.
இதனால் அந்த இளைஞருக்கும் மருத்துவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் திடீரென்று அவருடன் வந்த சக இளைஞர்களும் சேர்ந்து ஆறுபேர் கொண்ட கும்பல் மருத்துவரையும் தடுக்க வந்த மருத்துவமனை காவலர்களையும் தாக்கி விட்டு தப்பியோடினர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்தும் மருத்துவரை தாக்கிய இளைஞர்களை கைது செய்யக் கேட்டும் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் இன்று காலையில் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பாறசாலை போலீசார், இதுவரை 4 பேரை கைது செய்ததோடு, மேலும் இருவரை தேடி வருகின்றனர். நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.