சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை ; வாயடைத்து போன அதிகாரிகள்!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடந்த போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரண்டு அணிகளாக அதிமுக பிளவுபட்டிருந்த நிலையில் சின்னங்கள் தனித்தனியாக ஒதுக்கப்பட்டு பிரச்சாரங்கள் நடைபெற்றன. இதில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாக ஆர்கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது .
இதில் தினகரனுக்கு இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லியில் அவருக்கு சொந்தமான 2 சொகுசு கார்கள் , ஒன்றரை கோடி ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் இந்த விவகாரத்தில் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஈசிஆரில் உள்ள சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுகேஷ் சந்திரசேகருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களும் , ஆவணங்களும் இருப்பதாக மத்திய அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் இன்று அவருக்கு சொந்தமான பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அத்துடன் அவருக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் பங்களாவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை கண்டு அமலாக்கத் துறை அதிகாரிகளே வாயடைத்து போயுள்ளனர், சோதனையின் முடிவில் கோடிக்கணக்கான பணமும், சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.