அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு - சாலையில் அமர்ந்து போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை இணைக்கும் சட்ட மசோதாவை, பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்தத்திற்கான சட்ட முன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, இந்த சட்டமுன் வடிவை ஆரம்ப நிலையில் எதிர்க்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “எப்போதுமே ஒரு சட்டம் கொண்டு வரப்படும் போது அரசியல் கட்சி கருத்துகளை சொல்லலாம். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது தான் இயக்கத்தின் கருத்துகளை சொல்ல முடியும். அவை முன்னவராக இருந்த ஓ.பி.எஸ்க்கு இது தெரியும் என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “இந்த சட்டத்தை அறிமுக நிலையிலே எதிர்த்து விட்டார்கள். அவர்கள் வெளிநடப்பு செய்ய இருந்தால் அதற்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறினார். தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்த நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.அதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.