தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை காவலர் காலணியால் அடித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அய்யனார் நகர் பகுதியை சேர்ந்தவர் லதா செல்வராஜ். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தினேஷுக்கும் மதுரையை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தங்களது 4 வயது பெண் குழந்தையுடன் மதுரையில் வசித்து வந்தனர். இந்தநிலையில், லதா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரையில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். இதுகுறித்த பிரச்னையில், தினேஷுக்கும், வினோதினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், வினோதினி மற்றும் அவரது உறவினரான விருதுநகர் எம்.புதுப்பட்டியில் காவலராக பணிபுரியும் காவலர் கணேசன் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பரமக்குடியில் உள்ள லதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் தினேஷிடம் வலுக்கட்டாயமாக பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, லதாவையும் பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி காவலர் கணேசன் ஆபாசமாக மிரட்டியுள்ளார்.
அதற்கு லதா கையெழுத்து போட மறுக்கவே அவரை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து காவலர் செருப்பால் அடித்துள்ளார். இந்தக் காட்சி தெருமுனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து லதா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவலர் கணேசன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சிசிடிவி வீடியோவை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றியுள்ளனர்.