திமுக நிர்வாகிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
ராநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் வில்லாயுதம் என்பவருக்கு சொந்தமான வீடு, தங்கும் விடுதி, மீன் கம்பெனி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் வில்லாயுதத்தின் சொத்து மதிப்பு, வங்கி வைப்பு தொகை, அவரது தொழில் குறித்து விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் வில்லாயுதம். திமுக மாவட்ட மீனவர் அணி செயலாளராகவும் அப்பகுதியில் பிரபலமான தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் அதிகமாக சொத்துகளை வாங்கி குவிதத்தாகவும் அதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என மத்திய அமலாக்கதுறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று காலை முதல் வில்லாயுதத்திற்கு சொந்தமான வீடு, தங்கும் விடுதி மற்றும் மீன் கம்பெனி உள்ளிட்ட இடங்களில் மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை முதல் நடத்திய சோதனையில் வில்லாயுதற்கு எப்படி வருமானம் வருகிறது, தற்போது அவருடைய சொத்து மதிப்பு என்ன உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருவதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சொத்து மதிப்பு குறித்து ஆவணங்கள், வங்கி பண பரிவர்த்தனை, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றிய அமலாக்கத் துறையினர் தொடர்ந்து அது குறித்து விசாரணை செய்து வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமலாக்கதுறையின் சோதனையின் முடிவில் அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வில்லாயுதம் தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தியதாக மெரைன் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வில்லாயுதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை அதிரடி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கடல் அட்டைகளை அடிக்கடி சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தி வந்த குற்றத்துக்காக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது இந்த நிலையில் இவரைப் போன்று பலரும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இந்த ராமேஸ்வரத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
இதில் வில்லாயுதம் சிக்கும் பட்சத்தில் கடல் அட்டைகள் மற்றும் நட்சத்திர ஆமை கடத்தல் தொழிலில் ஈடுபடும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ரீதியாக அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறதா என சில நிர்வாகிகளிடம் கேட்கும்போது சோதனை நடந்து முடிந்த பிறகுதான் கருத்துக்கூற முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.