கோழி கடைக்காரரைத் துன்புறுத்திய இரவில் கோழி திருட்டு போலீஸார் சஸ்பெண்ட்;எஸ்.பி அதிரடி..

 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள காடல்குடியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவர், காடல்குடி காவல் நிலையம் அருகில் ’ சத்யஸ்ரீ பிராய்லர்ஸ்’ என்ற பெயரில் கறிக்கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 16-ம் தேதி இரவு 11.40 மணிக்கு முத்துச்செல்வனின் செல்போனிற்கு அழைப்பு வந்துள்ளது. முத்துச்செல்வன் தூங்கி விட்டதால், அவரது மனைவி ஜெயா போனை எடுத்துப் பேசியுள்ளார்.

எதிர் முனையில் பேசியவர், ”காடல்குடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுவதாகவும், உடனடியாக ஒரு கிலோ கோழிக்கறி வேண்டுமென்றும் கேட்டுள்ளனர். அதற்கு ஜெயா தனது கணவர் தூங்கிவிட்டார். காலையில் தருவார் எனச்சொல்லி அழைப்பைத் துண்டித்துள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக அழைப்பு வர, போனை ’சைலண்ட்’ மோடில் போட்டுவிட்டு ஜெயாவும் தூங்கிவிட்டார். மறுநாள் காலையில், மீண்டும் இரவு பேசிய அதே எண்ணில் இருந்து போன் கால் வந்துள்ளது. போனை எடுத்துப் பேசினார் முத்துச்செல்வன். எதிர்முனையில் பேசியவர், ”நான் காடல்குடி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பாலகிருஷ்ணன் பேசுறேன். நேத்து ராத்திரி கோழிக்கறி கேட்டு உன் நம்பருக்குப் போன் பண்ணிணோம். உன் பொண்டாட்டிதான் போனை எடுத்தா. நீ தூங்கீட்டியோ? கறிக்காக, தொடர்ந்து போன் அடிச்சோம் நீ எடுக்கலை. அதனால, உன் கடையில இருந்து மூணு கோழிகளை சமைக்கிறதுக்காக எடுத்துட்டு வந்துட்டோம். கோழியைக் காணோம்னு நீ தேடக் கூடாதுல்ல. அதனால தான் போன் பண்ணிச் சொல்லுறேன்” எனச் சொல்ல, "அதற்கு பரவாயில்லை சார். ஒன்னும் பிரச்னை இல்ல சார்” எனக் கூறியுள்ளார் முத்துச்செல்வன். 


இதையடுத்து, கடந்த 18-ம் தேதி மீண்டும் கறிக்கடைக்கு வந்த தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் சதீஷ்குமார் இருவரும் ”மீன் வாங்கிட்டு வந்திருக்கோம். மீனை எங்களுக்கு வெட்டிக் கொடு” எனச் சொல்லி மிரட்டியுள்ளனர்.

”எனக்கு மீன் வெட்டத் தெரியாது சார். கோழின்னா வெட்டித் தர்றேன்” என முத்துச்செல்வன் சொல்ல, ”அப்படியா, கோழி வெட்டுறவனுக்கு, மீன் வெட்டத் தெரியாதா?” என கோபத்துடன் கேட்ட அந்த போலீஸார் இரண்டு பேரும் முத்துச்செல்வனை அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மதியம் முத்துச்செல்வனின் கடைக்குச் சென்ற போலீஸார், ”நாங்க உன் கடையில இருந்தது கோழியை எடுத்துட்டுப் போனதை ஏன் நீ மத்தவங்ககிட்ட சொன்ன?” எனக் கேட்டு முதலில் தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், முத்துச்செல்வனின் கன்னத்தில் அடித்துள்ளார்.இதனைத் தடுக்க முயன்றவர்களை காவலர் சதீஷ்குமார் தாக்கியுள்ளார். 

பிரச்னை பெரிதாகியதும் கிராம மக்கள் அங்கு கூடியதால் இரண்டு போலீஸாரும், அதே ஸ்டேஷனில் பணிபுரியும் மற்றொரு தலைமைக் காவலர் பாலமுருகனின் காரில் ஏறி, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். போலீஸார் தாக்கியதில் காயமடைந்த முத்துச்செல்வன், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸாரின் தாக்குதல் சம்மந்தமாக முத்துச்செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில், காடல்குடி போலீஸார் தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், சதிஷ்குமார் மற்றும் தாக்குதலுக்கு துனைசென்ற பாலமுருகன் ஆகியோர் மீது 5 பிரிவின் கீழ் (U/s-294(b), 323,324,427,506(ii)IPC ) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் , காவலர் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார். அத்துடன், இரு போலீஸாருக்கும் துணை போனதால் மற்றொரு தலைமைக் காவலர் பாலமுருகனை தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துள்ளார். அத்துடன், மூன்று போலீஸார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தவிட்டுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்