அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்றால் அதிரடி என்பது அனைவருக்கும் தெரியும். அவரது ஆதரவாளர்களும் அவர் வழி அதிரடிக்காரர்களே. அவர் வழி என்றால், செயலில் மட்டுமல்ல, சட்டை அணிவதிலும் தான். மஞ்சள் சட்டை தான் ராஜேந்திரபாலாஜியின் அடையாளம். அவரது ஆஸ்தான ஜோதிடர் சொன்ன நாள் முதல், மஞ்சள் மகிமையாக வலம் வந்த ராஜேந்திரபாலாஜியை பார்த்து, அவரது ஆதரவாளர்களும் மஞ்சள் மகிமைக்கு மாறியது ஊரறியும். ஆட்சி மாறிய பிறகும், அவர்களின் ஆடை பார்மட் மாறவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் எங்காவது ஒன்றுக்கும் மேற்பட்டோர் மஞ்சள் சட்டையில் நின்றால் அங்கு ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள் நிற்கிறார்கள் என்று அர்த்தம். சரி இப்போது என்ன பிரச்சினை என்றால், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தான் இப்போது ட்ரெண்ட். அதுவும் ராஜேந்திர பாலாஜியின் எல்லோ ஆர்மியும்- அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களும் போலீஸ் முன்னிலையில் மோதிக் கொண்டது தான் இப்போதைய டாக். சரி நடந்தது என்ன... இதோ..
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செல்வதாக இருந்தது. அவரை வரவேற்பதற்காக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் சந்திப்பில் அதிமுகவினர் இரு பிரிவாக வரவேற்பு வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையிலும், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் இரு பிரிவாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் செல்லும் பொழுது கே. டி ராஜேந்திர பாலாஜி ஒழிக என கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திர பாலாஜியின் ‛எல்லோ ஆர்மி’ , அந்த தொண்டரை தாக்கினர் இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். பரபரப்பான சாலையில் நடந்த இந்த மோதலால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை போராடி சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், போலீசார் முன்னிலையிலேயே அவர்கள் மோதிக்கொண்டனர். ஒரு வழியாக அவர்களை சமரசம் செய்து போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.
இன்று இரவு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ‛எல்லோ ஆர்மி’ பெங்களூரு அணியுடன் மோதுவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன் பகலிலயே ராஜேந்திர பாலாஜியின் எல்லோ ஆர்மி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.