6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன். இவர் அதே கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா உள்ளிட்ட 5 சகோதரர்கள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு வெங்கலத்தாலான படிக்கட்டுகள் அமைத்து அதில் தனது பெயர் பொறித்து அன்பளிப்பு செய்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பெயர் பொறித்து படிக்கட்டு வைக்கக்கூடாது என அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கூறியுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிலவன் , கர்ணன், ஜெயகுமார் உள்ளிட்ட 6 சகோதரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான 2 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் இந்த ஆறு குடும்பத்துடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக்கூடாது இதனை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், கீழமூவர்க்கரையில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் ஆறு குடும்பங்களின் பெயரைக் கூறி இவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இவர்கள் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு வருகை புரிந்து. தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட ஊர் முக்கியஸ்தர்களான தேவேந்திரன், முத்து, காத்தலிங்கம், மணியன் மற்றும் இவர்களுக்கு தூண்டுதலாக செயல்பட்ட எண்ணரசு, சேகர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சீர்காழி வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் வட்டாட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து தங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து துணை வட்டாட்சியர் அவர்களின் மனுவை பெற்று இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றவர்கள் மாவட்ட ஆட்சியர் லலிதாவை சந்தித்து முறையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் கோயில் திருவிழாவில் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என வேதனையுடன் தெரிவித்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சீர்காழி வட்டாட்சியர் சண்முகம், டிஎஸ்பி லாமெக் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது இதில் கிராம தலைவர்கள் கிராம மக்களை அழைத்து பேசி முடிவு தெரிவிப்பதாக தெரிவித்து சென்றனர். இந்நிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் குடும்பத்தினர் வட்டாட்சியரிடம் புகார் அளித்த ஆத்திரத்தில் கீழமூவர்கரை சேர்ந்த எதிர் தரப்பு கோஷ்டியினர் ஒன்று சேர்ந்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தினரை ஊருக்கு வந்தவுடன் சரமாரி தாக்கி மண்டையை உடைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்பொழுது ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 6 குடும்பங்களையும் ஊருக்குள் சேர்க்க மாட்டோம் என கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர். தொடர்ந்து கீழமூவர்க்கரை கிராம நிர்வாகிகள் மற்றும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 6 குடும்ப உறுப்பினர்களிடம் கோட்டாட்சியர் நாராயணன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது சட்டரீதியான குற்றம் என்றும் என எச்சரித்த கோட்டாட்சியர் மளிகை பொருட்கள்,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க தடை விதிக்க கூடாது எனவும், கிராமத்தில் சென்று சுமுகமாக சேர்ந்து வாழ வேண்டுமெனவும் அமைதிப் பேச்சுவார்த்தையில் இருதரப்பினர் இடையே எழுதி கையெழுத்து பெறப்பட்டது.
இந்நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த தடையை நீக்காமல் காய்கறி,தண்ணீர், மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு மட்டுமே கிராம பஞ்சாயத்தார் அனுமதி அளித்துள்ளதாகவும், தாங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க கூடாது, கோயிலில் வழிபட அனுமதி கிடையாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர் எனவும், அரசு அதிகாரிகளும் சட்டத்திற்கு புறம்பான ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கட்டுப்பாட்டை நீக்க வழி செய்யாமல் ஒருதலை பட்சமாக அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட ஆறு குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் பத்திரிகைகளில் இதுகுறித்து வெளியான செய்தியை அடுத்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து ஆறு குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பான அறிக்கையினை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.