பள்ளிகள் திறப்பிற்கு பிறகு 83 மாணவர்களுக்கு கொரோனா : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
சென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு பிறகு 83 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்பில் 28 அறிவிப்புகளை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்பிக்க உள்ளோம். மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்று யாரும் கூறவில்லை.
கோவை மாவட்டத்தில்தான் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வருகின்றனர். அதிகபட்சமாக, கன்னியாகுமரியில் 87% பேர் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு இதுவரையில் 83 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, எனக் கூறினார்.