உள்ளாடையுடன் சென்ற எம்.எல்.ஏ., - வயிறு கலக்கியதால் சென்றதாக விளக்கம் வேறு!
ஓடும் ரயிலில் வெறும் உள்ளாடையுடன் சுற்றித்திரிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் பீகார் எம்எல்ஏ கோபால் மண்டல்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ கோபால் மண்டல். இவர், ரயிலில் பயணம் செய்யும் போது உள்ளாடைகளுடன் சுற்றித் திரியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பலரும் இவரை கடுமையாக விமர்சித்தனர். பாட்னாவிலிருந்து புதுடெல்லிக்கு தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் எம்எல்ஏ, நேற்று பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
மண்டல் தனது இரண்டு உதவியாளர்களுடன் கோச் எண் ஏ 1 (இரண்டாவது ஏசி) பயணம் செய்தார். அவர்களின் இருக்கை எண்கள் 13, 14 மற்றும் 15 ஆகும். உத்தரபிரதேசத்தில் தில்டார்நகர் ஸ்டேஷனை ரயில் கடக்கும்போது, எம்எல்ஏ தனது ஆடைகளை கழற்றிவிட்டு, உள்ளாடைகளுடன் கழிவறைக்கு சென்றார். சக பயணியான பீகாரைச் சேர்ந்த பிரஹலாத் பாஸ்வான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, எம்எல்ஏவின் இந்த செயலை அவர் எதிர்த்தார். இதனால், எம்எல்ஏ கோபால் மண்டலும், அவரின் உதவியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மட்டுமல்லாமல், மற்ற பயணிகளுடன் அவர்கள் வாக்குவதத்தில் ஈடுபட்டனர்.
மண்டல் பயணிகளை அடிக்க முயன்றதாகவும், அவர்கள் போராட்டத்தை எழுப்பிய பின்னர் அவர்களை சுட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் பாஸ்வான் மேலும் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக ஆர் பிஎஃப் அதிகாரிகளிடம் புகார் எழுப்பப்பட்டது. பின்னர் அதிகாரிகள் எம்எல்ஏவை ரயிலின் மற்றொரு கோச்சிற்கு மாற்றினார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கோபால் மண்டல் விளக்கம் அளித்துள்ளார். ரயிலில் பயணம் செய்யும் போது வயிறு உபாதை ஏற்பட்டத்தாகவும், அதனால்தான் மேல் ஆடைகளை கழட்டி கழிவறைக்கு சென்றதாகவும் கூறினார்.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த எம்எல்ஏவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, மக்கள் அவரை ட்ரோல் செய்தனர். உள்ளாடைகளில் சுற்றித் திரிவது வயிற்று வலியை குணமாக்கும் என்று தங்களுக்கு தெரியாது என்று பலர் நகைச்சுவையாக கூறினார்கள்.