இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது ஆள்கடத்தில், கொலைமிரட்டல் வழக்குப்பதிவு..!
தூத்துக்குடி ஆசிரியரை கடத்தி மிரட்டி பணம் பறித்ததாக சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ஏரல் அருகே உள்ள குறிப்பான்குளம் குப்பாபுரத்தைச் சேர்ந்தவர் சாலமோன். 52 வயதான இவர், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி அவரது உறவினர் தினேஷ் என்பவர் செல்போனில் அழைத்துள்ளார்.
அவரது அழைப்பை அப்போது கவனிக்காத சாலமோன், இரவில் தினேஷிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, செல்போனில் பேசிய தினேஷ் அவசர வேலையாக சோலை குடியிருப்பு வந்திருப்பதாகவும், ஊருக்கு வெளியே வருமாறும் அழைத்துள்ளார். சாலமோனும் நடந்தே ஊருக்கு வெளியே வந்துள்ளார்.
அப்போது, டெம்போ வேனில் வந்த நான்கு பேர் சாலமோன் கழுத்தை பிடித்து வலுக்கட்டாயமாக ஏற்ற முயற்சித்துள்ளனர். தினேஷ் அவர்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள்? பேச வேண்டும் என்றுதானே கூறினீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது, டெம்போ வேனில் இருந்தவர்கள் திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று தினேஷ் மற்றும் சாலமோனை மோட்டார் சைக்கிளில் வருமாறு கூறியுள்ளனர். அவர்களும் இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்செந்தூர் அருகே சத்யாநகர் சந்திப்பில் மோட்டார் சைக்கிள் வரும்போது மறித்து, சாலமோனை மட்டும் வலுக்கட்டாயமாக டெம்போ வேனில் ஏற்றியுள்ளனர். வேனில் ஏறியபிறகுதான் சாலமோனுக்கு தன்னை கடத்தி செல்வது போலீசார் என்றும், அவர்கள் சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
வேனில் வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அமுதா, குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் நான்கு காவலர்கள் இருந்துள்ளனர். அவர்களுடன் நிதிநிறுவன உரிமையாளர் சிவகுமார் நாயரும் உடனிருந்துள்ளார். அப்போது, சிவகுமார் நாயர் சாலமோனிடம் “ உன் தம்பி தேவராஜ் எனக்கு ரூபாய் 21 லட்சம் பணம் தர வேண்டும். உன்னை தூக்கினால்தான் எனக்கு பணம் வரும்” என்று கூறியுள்ளார். பின்னர், அடுத்த நாள் சென்னை வந்த அவர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு அருகில் சென்று வேனை நிறுத்தியுள்ளனர்.
அப்போது, சாலமோனிடம் “உன்னை விடுவிக்க வேண்டுமென்றால் ரூபாய் 3 லட்சம் பணம் அளிக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்துள்ளனர். வேறு வழியில்லாத சாலமோன் தன் மனைவியிடம் நடந்ததை கூறி, ரூபாய் லட்சத்தை உடனே ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். பின்னர்,டெம்போ வேன் செலவிற்காக ரூபாய் 1.50 லட்சம் கூடுதலாக தர வேண்டும் என்றும் கேட்டு அவரை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன சாலமோன் மேலும் ரூபாய் 1.50 லட்சம் அளித்துள்ளார். இதில் 3 லட்சத்தை சிவகுமார் நாயரிடம் அவர்கள் அளித்துள்ளனர். மீதமுள்ள 1.50 லட்சத்தை அவர்களிடம் வைத்துக் கொண்டனர்.
இதுதொடர்பாக, சாலமோன் மனைவி புஷ்பராணி திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்த மனு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டி.ஐ.ஜி.யிடமும் புகார் அளித்துள்ளார். அப்போதும், காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், தனக்கு நியாயம் கோரி திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சாலமோன் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தவிரட்டது.
இதையடுத்து, சாலமோனை கடத்திச் சென்ற காவல் ஆய்வாளர் அமுதா, காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணா, நான்கு காவலர்கள் மற்றும் சிவகுமார் ஆகியோர் மீது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஆள்கடத்தல், ஆபாசவார்த்தைகளால் திட்டுதல், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.