உள்ளாட்சித் தேர்தல்: கள்ளக்குறிச்சியில் அடுத்தடுத்து சிக்கும் பணம்...!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முக்கிய இடங்களில் நின்று வாகன சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பரிசுபொருட்கள் மற்றும் கடத்தி செல்லப்படும் மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
சின்னசேலம் ஒன்றியத்தில் தாசில்தார் சத்தியநாராயணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசாரை கொண்ட பறக்கும் படையினர் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்திலிருந்து கச்சிராயப்பாளையம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சேலத்தைச் சேர்ந்த ரேவாட்சிங் (26) என்பவர் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 1.63 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சின்னசேலம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமியிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவி கொளப்பாக்கம் கிராமத்தில் நேற்று திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருக்கோவிலூர் அருகே உள்ள டீ குன்னத்தூர் கிராமத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி, அதை ஓட்டி வந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பச்சமுத்து என்பவரிடம் விசாரித்து, சோதனை செய்தனர். அதில், அவர் 73 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல்கலைச்செல்வியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதேபோல், சங்கராபுரம் ஒன்றியத்தில் தனி வட்டாட்சியர் சத்யநாராயணன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர்கள் சுகுமார், சுதாகர் ஆகியோரை கொண்ட பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவு 11.45 மணி அளவில் சங்கராபுரம் அருகே உள்ள இளையாங்கண்ணி கூட்டு ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் ஜோசப் என்பவர் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதை சங்கராபுரம் தேர்தல் உதவியாளர் பிரதீப்குமாரிடம் ஒப்படைத்தனர்.