விஜிபி குழுமம் தொடர்பான அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை!
பணமோசடி புகார் விவகாரத்தில் பிரபல கட்டுமான நிறுவனமான விஜிபி குழுமம் தொடர்பான அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல விஜிபி குழுமத்தின் கட்டுமான நிறுவனம் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட். இதன் நிர்வாக இயக்குனர் விஜிபி பாபு தாஸ். இவர் மீது சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ் என்பவர் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணராவ் அளித்த புகாரில் விஜிபி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனமான பிஎன்பி என்ற நிறுவனத்தின் இயக்குனர் மது என்பவர் மூலம் இந்தப் பணத்தை கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விஜிபிக்கு சொந்தமான மூன்று சொத்துக்களின் ஆவணங்களை அடிப்படையாக வைத்து, 2017 ஆம் ஆண்டு 70 லட்ச ரூபாய், 50 லட்ச ரூபாய் மற்றும் 60 லட்ச ரூபாய் என மூன்று தவணைகளில் பணத்தை கொடுத்ததாக கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்த விஜிபி பாபு தாஸ், அதன்பின் பணத்தை கேட்கும் போது , தன்னை சந்திக்க மறுத்ததாகவும், தன அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்து வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விஜிபி குடும்ப நிர்வாக இயக்குனர் பாபு தாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள விஜிபி குழுமத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். புகார் அளித்த கிருஷ்ணராவ் கொடுத்த சொத்து ஆவணங்களை மற்றும் ஒப்பந்த ஆவணங்களையும் அடிப்படையாக வைத்து சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டில் விஜிபி பாபுதாஸ், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததில் புகார்தாரர் கிருஷ்ண ராவ் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.