நிலக்கரிக் கொள்முதல் என்பது பொன் முட்டையிடும் வாத்து.ஒரு பக்கம் கொரோனா இன்னொரு பக்கம் ஸ்கேன்டல் வீடியோ.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அணுமின் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த 2.30 லட்சம் டன் நிலக்கரியைக் காணவில்லை என்றார். உடனே நாமெல்லாம் அடடா நமக்கு ஒரு மீம்ஸ்ஸ்க்கு மெட்டீரியல் கிடைத்துவிட்டது என்று குதூகலித்தோம். நமக்கும் இந்த கொரோனாவால் வாழ்க்கை ரொம்பவும் போரடித்துக் கிடக்கிறது. பொண்டாட்டி, காதலியைத் தவிர வேறு யாருக்கும் முத்தம் கூட கொடுக்க முடியாத துயரம் தமிழகத்தை வாட்டுகிறது. ஒரு பக்கம் கொரோனா இன்னொரு பக்கம் ஸ்கேன்டல் வீடியோ.
செந்தில் பாலாஜி சொன்னபோதே எனக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது, இது ஏதோ inventory சமாச்சாரம், ஆனால் அமைச்சர் அதை கில்மா சம்பவம் போல ஆக்கி தன் பங்குங்கு சிக்ஸர் அடிக்க முயல்கிறார் என்று. இப்போது படித்தால், நடந்த சம்பவம் அதுதான்.
நிலக்கரியை எரித்து அதிலிருந்து நாம் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். அதைச் செய்பவை அனல் மின் நிலையங்கள். ரொம்ப டெக்னிக்கலாக மண்டையைப் போட்டு குடையாதீர்கள். எனக்கு அது என்ன என்று விளக்கமாக சொல்ல வரும், ஆனால் உங்களுக்கு போரடிக்கும். இங்கு இந்த கிணறு காணாமல் போன சம்பவம் மட்டும் என்ன என்று பார்ப்போம். படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் அல்லவா அதனால் வருடத்துக்கு இழப்பு மட்டும் சில ஆயிரம் கோடிகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதெல்லாம் கரண்ட் பில்லாக நமது தலையில்தான் விடிகிறது. இப்படி சொன்னால்தான் ஷாக் அடித்த மாதிரி புரியும்.
இந்த நிலக்கரிக் கொள்முதல் என்பது பொன் முட்டையிடும் வாத்து. வாத்து என்பது கூட தவறு, பொன் லத்தி போடும் யானை. சுமக்கத்தான் நாம் இருக்கிறோமே அப்புறம் என்ன. நமக்குக் கிடைக்கும் உள்ளூர் நிலக்கரி தவிர்த்து பெரும்பாலான நிலக்கரியை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்தோனேஷியா பெரிய சப்ளையர்.
எந்த ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும், அதற்கு ஒரு தர நிர்ணய அளவீடு இருக்கும் அல்லவா? கத்திரிக்காய் வாங்கினால் முத்தலாக இருக்கக் கூடாது, சீனி வாங்கினால் இனிப்பாக இருக்கவேண்டும் மண்ணு மாதிரி இருக்கக் கூடாது, ஒரு குவார்ட்டர் சரக்கடித்தால் அட்லீஸ்ட் ஒரு மணி நேரத்துக்கு போதை இருக்கவேண்டும் என்பது மாதிரி. இது மாதிரி நிலக்கரிக்கும் தர அளவுகோல் இருக்கிறது. அதற்கு நிலக்கரியின் calorofic value (குத்துமதிப்பாக சொன்னால் எரிதிறன்) என்று பெயர்.
நாம் நிலக்கரி வாங்குவதற்கு ஒரு கம்பெனிக்கு ஆர்டர் தருகிறோம் என்று சொன்னால், எங்களுக்கு கிலோவுக்கு இவ்வளவு எரிதிறன் உள்ள நிலக்கரி வேண்டும் என்று சொல்லுவோம். அவர்கள் அதற்குத் தகுந்தாற்போல் விலை சொல்லுவார்கள். உதாரணத்துக்கு எரிதிறன் அளவு ஒரு கிலோ நிலக்கரிக்கு 6500 KCL என்பது தர நிர்ணயம். இந்த 6500 KCL என்கிற அளவுக்கு பதிலாக அந்த கம்பெனி 5000 KCL திறன் கொண்ட நிலக்கரியை சப்ளை பண்ணிவிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் உற்பத்தி செய்கிற மின்சாரம் குறையும். அதனால் நாம் என்ன செய்வோம், சரி உன்னுடைய சாமானில் சூடு கம்மியாக கிளம்புகிறது அதனால் விலையைக் குறைத்துக்கொள் என்று சொல்வோம். பேரம் நடக்கும் விலைக்குறைப்பு நடக்கும். இதுதான் உலக நடைமுறை.
ஆனால் அரசுக் கொள்முதலில் என்ன நடக்கும் என்றால், கரி என்னவோ 5000 KCL கரிதான் ஆனால் விலை மட்டும் 6500 KCL கரிக்கு என்ன விலையோ அதை இறுதி செய்து, மீதி தொகைக்கு பேரம் நடந்து கட்டிங் கைமாறும். டாக்குமென்டில் எல்லாம் 6500 KCL கரி என்றுதான் இருக்கும். ஆனால் சப்ளை என்னவோ 5000 KCL கரிதான். ஒரு ஆண்டிற்கு எவ்வளவு நிலக்கரி நாம் இறக்குமதி செய்கிறோம் என்று கணக்கு பண்ணி பார்த்தால், இந்த கட்டிங் மட்டுமே பல்லாயிரம் கோடிகளில் இருக்கும். அதனால்தான் அந்தத் துறைக்கு மந்திரி, உயரதிகாரி என்று கடை மட்டம் வரை எல்லாரும் போட்டி போடுவார்கள். ரெண்டு வருடம் இருந்தாலே லைஃப் டைம் செட்டில்மென்ட் இல்லையா அதான்.
அனுபவசாலியான செந்தில்பாலாஜியை தளபதி அங்கு நியமித்திருப்பதன் சூட்சுமம் புரிகிறதா? துரைமுருகன், எ.வ. வேலுக்கு அடுத்து செந்தில் பாலாஜி கையில்தான் நல்ல பேட் இருக்கிறது. சிக்ஸர்கள் பறக்கும். சரி நாம் சம்பவ இடத்துக்குப் போவோம்.
உதாரணமாக நூறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க என்பதாயிரம் டன் 6500 KCL நிலக்கரி தேவைப்படும் என்றால் அதே மின்சாரத்தை 500 KCL கொண்டு தயாரிக்க ஒரு லட்சம் டன் நிலக்கரி வேண்டும். இப்படிக் கூடுதலாக செலவான நிலக்கரிதான் கிணறு காணாமல் போன கதை. பேப்பரில் இருப்பது சூடு உள்ள நிலக்கரி, குடோனில் இருப்பது சூடு குறைந்த நிலக்கரி. அனல் மின் நிலையத்தில் இருப்பவன், நிறைய கரியை அள்ளிப்போட்டு கொளுத்திதான் தனது இலக்கை எட்டியிருப்பான். தயாரித்த மின்சாரம் இவ்வளவு அதற்கு எரித்த கரி இவ்வளவு என்று கடைசியாக கணக்கு பார்க்கையில் 2.30 லட்சம் டன் நிலக்கரி கூடுதலாக எரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதைத்தான் நிலக்கரியைக் காணவில்லை என்கிறார் மந்திரி. அவருக்கு இந்த சம்பவம் தெரியாதா? நன்றாகத் தெரியும். பிறகு ஏன் அப்படி சொல்கிறார். அப்படி சொன்னால்தான் அது சென்சேஷனல் செய்தி.
நான் மேலே சொல்லியிருப்பது கொள்முதல் ஊழல் மட்டுமே. அங்கு நடக்கும் ஒவ்வொரு செயலுமே ஊழலாக, பொறுப்பற்ற தன்மையாக இருக்கிறது. படிப்பதற்கே சலிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நிர்வாக நடைமுறையிலும் பெரிய பெரிய ஓட்டைகள். தெரிந்தே விட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கொள்முதலின் போதும், sample basis ல் அவற்றின் எரிதிறனை சோதிக்க சரியான சோதனைக் கூடங்களே இல்லை. போர்ட்டில் இருந்து கரியை அனல் மின் நிலையத்துக்கு கொண்டுவருவதில் வீணாகும் கரி முதல், அதை முறையாக குவித்து வைக்காமல் வீணாகும் கரி வரை சில ஆயிரம் கோடிகள் வீணாகின்றன.
அடுத்து அனல் மின் நிலைய உபகரணக் கொள்முதல். தரமற்ற பொருட்களை வாங்கி பொருத்துவது. அது அடிக்கடி பழுதாகும். மீண்டும் கொள்முதல். அவற்றை பராமரிக்கும் கம்பெனிக்கு தொடர்ந்து maintenance contract. அரசு இதில் ரொம்பவும் கண்டிப்பாக இருக்க முடியாது. எப்போது மின்சாரத்தை நிறுத்தினால், அரசு அடிவாங்கும் என்று அதிகாரிகளுக்குத் தெரியும். அதனால் அவர்களை ராஜா போலத்தான் நடத்த வேண்டும். அரசின் பங்குக்கு அரசின் ஊழல், அதிகாரிகளின் பங்குக்கு அவர்களின் ஊழல். எந்த accountability யும் இல்லை.
செந்தில் பாலாஜி வந்து அப்படியே சிஸ்டத்தை நட்டு நிமிர்த்தி விடுவார் என்று நான் நம்பவில்லை. நமக்கு விசிலடிப்பதற்கு சில வாய்ப்புகளைத் தருவார் அவ்வளவே. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் மந்திரி தங்கமணி. கூடுதலாக இந்த பற்றாக்குறையை ஒன்றும் திமுக வந்து கண்டுபிடிக்கவில்லை, 2020 ம் ஆண்டே கவனத்துக்கு வந்ததுதான் என்கிறார். சரி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கொஞ்சம் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்துவிட்டேன் என்கிறார். மந்திரியை விடுங்கள், நிர்வாகத்துக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்கள் என்ன சொல்கிறார்கள்? தேர்தல் பாஸ், இந்த கொரோனா வேறு அதான். ஹி.. ஹி.. ஹி.. என்கிறார்
செய்தியாளர் செல்வமணி கடலூர்