சென்னையில் 12 இடங்களில் ‛ஐயமிட்டு உண்’: உணவு தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளலாம்!
‘பப்ளிக் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பின் மூலம் சென்னையில் மொத்தம் 12 இடங்களில் உணவு குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. விருப்பம் இருப்பவர்கள் இப்பெட்டியில் உணவுகளை வைத்துவிட்டு செல்லலாம். அதேபோல், அந்த உணவை வேண்டுபவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றியும், யாருடைய அனுமதியுமின்றியும் எடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எண்ணூரிலும் இந்த உணவு குளிர்சாதன பெட்டியை வைக்க வேண்டுமென “கலாம் நண்பர்கள்” என்ற அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் எண்ணூரில் அன்னை சிவகாமி நகர் பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் உணவு குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டது.
இதனையடுத்து குளிர்சாதன பெட்டியை திறந்துவைக்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எண்ணூர் காவல் ஆய்வாளர் கிளாஸ்டின் டேவிட், கலாம் நண்பர்கள் அமைப்பினர், பப்ளிக் ஃபவுண்டேஷன் அமைப்பினர், அன்னை சிவகாமி நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
திறப்புவிழாவில், உணவு குளிர்சாதன பெட்டியை பள்ளி சிறுமி ஒருவர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இந்தக் குளிர்சாதன பெட்டியில் சீலிடப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், உலர்ந்த ரொட்டிகள், திண்பண்டங்கள், உணவு பொட்டலங்கள், காய்கறிகள், பழங்கள், வீட்டில் செய்யப்பட்ட உணவுகளை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், குளிர் சாதன பெட்டியில் கெட்டுப்போன உணவுகளையோ, காலாவதியாகும் நிலையில் இருக்கும் உணவுகளையோ வைக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் ஏழு நாட்களும் இந்தக் குளிர்சாதன பெட்டிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியை கலாம் நண்பர்கள் அமைப்பினர் பராமரிக்க இருக்கின்றனர். உணவில்லாத நிலை வேண்டும் என்கிற நோக்கில் இந்த திட்டத்தை துவக்கியுள்ளனர். விரும்புவோர் இதில் தங்கள் பங்களிப்பை வழங்கலாம்.