மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை, தான் விரும்பவில்லை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குருவிகுளம், சங்கரன்கோவில் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் கலிங்கப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை.
என் 56 ஆண்டுகால அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன். 28 ஆண்டுகாலம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கி.மீ. நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன், நூற்றுக்கணக்கான போராட்டங்கள்; ஜெயில் வாழ்க்கை. அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் அரசியலுக்கு வருவதை 20 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கட்சிக் குழு கூட்டம் முடிவு செய்யும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை ஈவு இரக்கமற்ற கோரப் படுகொலை. தாலிபான்கள் செயல்பாடுகளை போல் இங்கு செய்து உள்ளனர். இதற்கு மன்னிப்பே கிடையாது நீதிமன்றத்தை கூட அவர்கள் மதிக்கவில்லை'' என்றார்.