எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களுக்கு செல்லும் சசிகலா : அதிமுக பொன்விழா நாளில் சபதம் ஏற்க திட்டம்?
வரும் 17ஆம் தேதி அதிமுக பொன் விழா கொண்டாட உள்ள நிலையில் 16-ஆம் தேதி மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்தார். இந்நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்த நிலையில், அதன்பின் பின்வாங்கினார்.
அதன்பின் இவர் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தார். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சசிகலாவை விரைவில் அதிமுகவை தலைமையேற்க வருமாறு தெரிவித்தனர்.
சசிகலாவும் விரைவில் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதிமுக பொன் விழாவை சிறப்பாக கொண்டாட உள்ளது.
இதனை அடுத்து வரும் 17ஆம் தேதி அதிமுக பொன் விழா கொண்டாட உள்ள நிலையில் 16-ஆம் தேதியன்று மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.
மறுநாள் ராமேஸ்வரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.