சாலையில் கிடந்த தங்கம்: தூய்மை பணியாளர் அல்ல தூய்மையான பணியாளர் என பாராட்டு - நெகிழ்ந்த இறையன்பு!
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் ராம். இவரது மனைவி ஷோபனா. இவர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்துள்ளனர். அப்போது தவறுதலாக 100 கிராம் தங்க நாணயத்தைக் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர்.
பிறகு வீட்டில் தங்க நாணயம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலிஸார் அப்பகுதி தூய்மை பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து மேரி என்ற தூய்மை பணியாளர் குப்பைகளைத் தரம் பிரித்த போது அவருக்கு 100 கிராம் தங்க நாணயம் கிடைத்துள்ளது. இது குறித்து தனது மேலதிகாரிக்கு மேரி தகவல் தெரிவித்துள்ளார். உடனே இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தங்க நாணயத்தை மேரி போலிஸாரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் போலிஸார் கணேஷ் ராமனைக் காவல்நிலையம் வரவழைத்து அரவது தங்க நாணயத்தை ஒப்படைத்தனர். நேர்மையாக 100 கிராம் தங்க நாணத்தை நேர்மையாக ஒப்படைத்த மேரிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்புவும் தூய்மை பணியாளருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.
நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல, தூய்மையானப் பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று"என தெரிவித்துள்ளார்.