மயிலாடுதுறை: அரசு பேருந்தை இயக்கிய எம்எல்ஏ - அசந்து போன பொதுமக்கள்...!
மயிலாடுதுறை மாவட்டம் வானாதி ராஜபுரம், அஞ்சளாறு, சோழம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் பேருந்து வசதி இல்லாமல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், கூலி வேலைக்கு வெளியூர் செல்வோர், அன்றாட இதர பணிகளுக்காக செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் அவதியுற்று வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தங்கள் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நகரத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர் ராஜகுமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை அடுத்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ராஜகுமார் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி பொதுமக்களின் வசதிக்காக புதிய பேருந்து சேவையை ஏற்படுத்தி தந்தார். மயிலாடுதுறையில் இருந்து ஜங்ஷன், மாப்படுகை, சோழம்பேட்டை, அஞ்சார்வார்த்தலை, குத்தாலம், திருவாலங்காடு வழியாக ஆடுதுறைக்கு புதிய வழிதடத்தில் பெண்களுக்கு கட்டணம் இல்லாம அரசு டவுன் பஸ் போக்குவரத்து தொடக்க விழா மாப்படுகையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ராஜகுமார் கலந்து கொண்டு கொடியசைத்து அரசு பேருந்து போக்குவரத்தை தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து அரசு பேருந்தில் ஏறிய மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பேருந்தை ஓட்ட துவங்கினார். பின்னர் மாப்படுகையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் குத்தாலம் வரை செல்லும் வழிகளில் பயணிகளை பேருந்தில் ஏற்றி இறக்கி சென்றார். இந்நிகழ்வு கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடமும் ஆச்சரியத்தை வரவேற்பையும் ஏற்படுத்தியது. இதில் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வழக்கமாக புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைக்கும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு பேருந்தை இயக்க தெரியும் பட்சத்தில் சில அடி தூரம் வரை பேருந்தை இயக்குவது வழக்கம். அதேபோன்றுதான் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பேருந்தை ஓட்ட துவங்கியதும் பலரும் இவர் சில அடிகள் வரை ஓட்டி செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக, 10 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து ஓட்டுநராக மாறி பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பொதுமக்களை பேருந்தில் ஏற்றி இறக்கிய நிகழ்வு பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேருந்து வசதி கிடைத்த கிராம மக்கள் கூறுகையில், பல ஆண்டு காலமாக எங்கள் கிராமங்களில் பேருந்து வசதி வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை செவி கொடுத்து கேட்டு தற்போது மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எங்கள் பகுதிக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.