ஓ.பன்னீர்செல்வம் தி.நகர் வீட்டை விரைவில் காலி செய்கிறார்
ஓ.பன்னீர்செல்வம் அமைச்சராகும் போதெல்லாம் அவர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை அரசு பங்களாவில் இருந்து வந்தார். அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் இதே இல்லத்தில் பல்வேறு பதவிகளில் அவர் இருந்தார். குறிப்பாக தமிழக நிதியமைச்சர், தமிழக முதலமைச்சர், தமிழக துணை முதலமைச்சர் என்ற மூன்று முக்கிய பொறுப்புகளும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பும் அவர் இருந்த இந்த அரசு பங்களாவில் கிடைத்தது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்த வீட்டை காலி செய்ய நேர்ந்தது.
அதை தொடர்ந்து, தி.நகரில் உள்ள இயக்குனர் சங்கர் இல்லத்தை வாடகைக்கு எடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் அவர் அங்கு வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திடீரென அவரது மனைவி விஜயலட்சுமி மருத்துவ சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். அதனால் மிகுந்த மனவேதனையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அந்த வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் சென்னை வந்த அவர் அடையாறில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். மேலும் அடையாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த மாத இறுதியில் அவர் புது வீட்டுக்கு குடி பெயருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.