இது வழக்கமான நடைமுறை தான்’: விவாதப் பொருளான அலுவல் கடிதம்…விளக்கமளித்த தலைமைச் செயலாளர்..!!
சென்னை: துறை செயலர்களுக்கு தலைமை செயலாளர் அனுப்பிய கடிதம் விவாதப் பொருளான நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.
அலுவல் ரீதியாக துறை செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருக்கிறது என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாகவே தரவுகள் திரட்டப்படுகின்றன.
நிர்வாகத்தில் வழக்கமான ஒன்றுதான் இந்த நடைமுறை. நிர்வாக ரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானதல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைதான் என்பது தெரியும் என விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலர்களும் தயாராக இருக்குமாறு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இது தற்போது விவாதங்களை எழுப்பியுள்ளது.