மழைநீர் தேங்கியது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
2015 வெள்ளத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? என உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.
மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், சாலைகளை அகலப்படுத்தும்போது மழைநீர் வடிகால் போன்ற முறையான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை, அதேபோல் கழிவுநீர் செல்வதற்கும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2015ஆம் ஆண்டு வெள்ளத்தை பாடமாக வைத்தே பருவமழையை சமாளிக்க முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏற்கெனவே தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதிகாரிகள் ஏதும் கற்றுக்கொள்ளவில்லையா என்றும், கடந்த 6 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்துகொண்டிருந்தது என்றும் கேள்வி எழுப்பியது.
மேலும், 2015 பெருவெள்ளத்தில் சந்தித்ததைபோலத்தான் சென்னை மீண்டும் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்று கூறிய நீதிமன்றம், பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்படும் இந்த நிலைமை, ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகவில்லை எனில் தாமாக முன்வந்து வழக்கு தொடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.