”மணிகண்டன் விஷமருந்தியே உயிரிழந்துள்ளார்”- மதுரை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தகவல்


 ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன், “விஷமருந்தியே உயிரிழந்துள்ளார்” என காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை, கீழத்தூவல் காவல்நிலைய காவலர்கள் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் எனக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, உடலை வாங்கவும் மறுத்துவிட்டனர்.

அதே நேரம் மாணவரை தாக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்து, சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டது. எனினும் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், ஊர் மக்களும் போராட்டம் நடத்தினர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மறு உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் உடற்கூராய்வுக்குப் பின், காவல்துறை தரப்பிலிருந்து வழக்கு குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பொன்று நிகழ்ந்திருந்தது. அதில் பேசிய கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், “மணிகண்டன் உடல் இரண்டு முறை உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆர்.டி.ஒ.-விடம் உரிய விவரங்கள் அளிக்கப்பட்டு, டிஜிபி தலைமையில் அனைத்துவகை விசாரணையும் நடைபெற்றுள்ளது. உடற்கூராய்வின் முடிவில், ஆம்புலன்ஸிலேயே அவர் இறந்துதான் இருந்தார் என்பது உள்ளிட்டவையெல்லாம் உள்ளது.

மணிகண்டன், விஷமருந்தியே தற்கொலை செய்திருக்கிறார். மணிகண்டனின் பெற்றோர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டதால், அதுதொடர்பாக விசாரணை நடத்தி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் உயர்நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மணிகண்டனின் பெற்றோருக்கும் காவல் துறை தரப்பிலிருந்து தனிப்பட்ட விதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது” என கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கூறியுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்