வாலை இங்கே ஆட்டாதீங்க".. பிரச்சாரங்களில் எகிறி அடித்த திருமாவளவன்..!
மதுரையில் விசிக நிறுவனர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது அவர் பேசும்போது, பாஜக - ஆர்எஸ்எஸ் கொள்கையே ஜாதிகளை கூறி பிரிவை ஏற்படுத்துவது தான்... இவர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்றனர். பாஜகவில் தலித்துக்கள் இணைவது மிகப் பெரிய ஆபத்து...என்னுடைய பேச்சுக்களால் மத்திய இணை அமைச்சர் முருகன் அச்சப்படுவதாக சொல்கிறார்..
விநாயகர் சிலையை கொடுத்து தலித்துக்களிடையே ஊடுருவ பார்க்கின்றனர்.தலித்துகளை எந்த பெயரில் ஆக்கிரமிப்பு செய்தாலும் அதை விடமாட்டேன். தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால் அது பாஜக ஆட்சியாக தான் இருக்கும்... அப்போது பன்னீர்செல்வம், பழனிசாமி பேச மாட்டார்கள். அவர்களுக்கு பதில் எச்.ராஜா போன்றோர் பேட்டி கொடுப்பார்கள் என்றார்... திருமாவளவனின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது.
பாஜக சராசரி அரசியல் கட்சி கிடையாது. அவங்களுக்கு பெரிய செயல் திட்டம் இருக்கு. அடுத்த 50 வருடங்களில் ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற செயல்திட்டத்துடன் செயல்படுகிறது பாஜக... இந்தியர்களை இரண்டாக பிரித்து, இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் வேறு நாட்டைச சேர்ந்தவர்கள் என்று நாட்டை 2 பிரிவாக பிரிக்கிறது பாஜக... ஹிஜாப் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது.மாணவர்களிடத்தில் அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு முதல்வர் லேப்டாப் வழங்குகிறார்; அங்கு காவி துண்டு தருகிறார்கள்.. யோசிச்சு பாருங்க" என்றார்.கடலூரில் பேசும்போது, "தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததில் இருந்தே தலைசிறந்த, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக சாதனை புரிந்துள்ளது.
இந்தியாவின் தலை சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்று சர்வே முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.. சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அந்த கூட்டணி சிதறி போனது. இது அதிமுக ஒற்றுமையாக இல்லை என்பதையே காட்டுகிறது.
கூட்டணியில் அதிமுக ஒருபுறம் பாமக ஒருபுறம் பாஜக ஒருபுறம் என தனித்தனியாக செயல்பட்டது இதனாலேயே அந்த கூட்டணி சிதைந்து போனது.ஆனால், திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்டுக்கோப்பாக அமைத்தது... அதே கூட்டணி தான் உள்ளாட்சித் தேர்தலிலும் அமைந்துள்ளது. அதிமுக கூட்டணி பலவீனம் அடைந்தது. அதேநேரம், திமுக கூட்டணி அதே கட்டுக்கோப்பாக பலமாக நிலைத்து நிற்கிறது..
அதிமுக கூட்டணியில் நல்ல தலைமை இல்லை.. அதிமுகவிற்கு தலைவர்களே இல்லை.. ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவிற்கு பொதுச்செயலாளர் பதவிக்கு ஆளே இல்லை. கட்சித் தலைவரையும் பொதுச் செயலாளரையும் அவர்களால் அமைக்க முடியவில்லை.அதிமுகவிற்கு நல்ல ஆற்றல் மிக்க தலைவர் இல்லை... திமுகவிற்கு கிடைத்தது போல நல்ல ஆளுமை வாய்ந்த தலைவர் அதிமுகவிற்கு இல்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்..
தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார்கள், ஊடுருவ நினைக்கிறார்கள்.. ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் மூலம் மறைமுகமாக முகமூடிகளை அணிந்து கொண்டு தமிழகத்தில் ஊடுருவ நினைக்கிறார்கள்.. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் அவர்களால் ஆளுமை செலுத்த முடிகிறது..ஆனால் தமிழகத்தில் வால் ஆட்ட முடியவில்லை.. இதற்கு காரணம் அவர்கள் வாலாட்டினால் வாலை ஒட்ட நறுக்க கூடிய ஆட்சி மற்றும் திமுக கூட்டணி இங்கு உள்ளது..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இங்கே அதிமுக ஆட்சியாக இருந்திருக்காது, மாறாக கைப்பவை கட்சியாகத் தான் இருந்திருக்கும்... காரணம் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை நடத்திவந்தது பாஜகதான். அவர்கள் அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர்கள் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வந்தனர்" என்றார்.