முதலமைச்சரை அவதூறாக பேசியதாக புகார் - பாஜக பிரமுகர் அதிரடி கைது
தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்
ஆரல்வாய்மொழியில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பாரதிய ஜனதா நிறுவப்பட்ட தின விழாவில் கட்சியின் மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் பேசினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் அளித்த புகாரில் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்றிரவு இரண்டரை மணியளவில் ஜெயப்பிரகாஷை கைது செய்ய இரணியலில் உள்ள அவரது வீட்டிற்கு 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சென்றனர். ஜெயப்பிரகாஷை கைது செய்வதை தடுக்க 50-க்கும் அதிகமான பாரதிய ஜனதா கட்சியினர் கூடினர்.
நான்கு மணி நேரமாக காவல் துறையினரும், பாஜகவினரும் அப்பகுதியில் கூடியிருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின்பு ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டார்.இதற்கிடையே தேசபக்தர்கள் மீது பொய்வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறி, ஆரல்வாய்மொழி காவல் நிலையம் முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.