திமுக பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் போலீசாருக்கு கொலை மிரட்டல்...
ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், திமுக கவுன்சிலரின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.
சென்னை ராயபுரம் கிழக்குப் பகுதி, 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன். இவர், கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் ராயபுரம் எம்.சி சாலை - ஜே.பி. கோயில் சந்திப்பில், தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் சேர்ந்து, கும்பலாக நின்று பேசிக் கொண்டு இருந்தார். மது அருந்தியிருந்த அவர்கள் தங்களது வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த வழியாக வந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் தியாகராஜன், மணிவண்ணன் ஆகியோர் கூட்டமாக நின்றிருந்த அவர்களை பார்த்து, கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது கோபமடைந்த அந்த கும்பல், போலீசாரை மிரட்டியதோடு ஆபாசமாகவும் திட்டிள்ளனர். மேலும் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசனும் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து காவலர் தியாகராஜன் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மீது, கும்பலாக கூடுதல், அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஜெகதீசன் உள்பட 4 பேரின் முன்ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயபிரகாஷ் நாராயணன், குருராஜ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் போலீசாரால் தேடப்பட்டு வந்த அறிவழகன், சதீஷ் ஆகியோர் ஜார்ஜ்டவுன் 15-வது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதில், முக்கிய குற்றவாளியான திமுக பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.