மனைவி, 2 பிள்ளைகளை ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட ஐ.டி.ஊழியர்!
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரர் நகர் சித்தி விநாயகர் தெருவில் பிரகாஷ்(41), மனைவி காயத்திரி(39), மகள் நித்தியஸ்ரீ(11), மகன் ஹரிகிருஷ்ணன்(8) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரகாஷ் அதிகாலை மரம் அறுக்கும் மெஷினால் அனைவரும் தூங்கும் போது மனைவி காயத்ரி, மகள் நித்தியஸ்ரீ, மகன் ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் அதே மெஷினால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவல் அறிந்த சங்கர்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டைப்திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி, மகள், மகன் என நான்கு பேரும் கழுத்தை அறுத்துக்கொண்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் நான்கு பேரின் உடலை மீட்ட போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் பிரகாஷ் சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐ.டி கம்பெனியில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்ததும், அவரது மனைவி காயத்ரி வீட்டின் அருகே நாட்டு மருந்து கடை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரகாஷின் மனைவி காயத்ரி பொழிச்சலூர் பகுதியில் பா.ஜ.க.,வின் மண்டல செயலாளராக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
கணவன் மனைவிக்கு அதேப்பகுதியில் சொந்தமாக வீடு இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்போதைய வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர். காயத்ரி தனது கட்சிப்பணிகளை கவனிப்பதற்காக வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர்.
இந்த நிலையில் கட்சிப் பணிகளுக்காக காயத்ரி அதிக அளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அருகாமை வீட்டிலிருப்பவர்களிடமும் காயத்ரி கடன் வாங்கியுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க, பணம் கொடுக்க முடியாமல் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது. இந்த நிலையில் மனைவி, மகன், மகளை கொலை செய்து பிரகாஷ் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கணவன் பிரகாஷ் அனைவரையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்வதற்காக முன்னரே திட்டமிட்டுதும், அதன்படி மரம் அறுக்கும் மெஷினை அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கடந்த 19 ம் தேதி டெலிவரி வாங்கியுள்ளார். வீட்டில் கேட்டதற்கு வீட்டு வேலைகளுக்காக மெஷின் வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று பிரகாஷ் மற்றும் காயத்ரிக்கு திருமண நாள் வர, அதனை குடும்பத்தோடு கோவில் சினிமா என கொண்டாடிவிட்டு நேற்றிரவு வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டுக்கு வந்தததும் வீட்டு வாசலில் கணவன் மனைவிக்கிடையே சண்டை எழுந்துள்ளது. அதன் பின் அனைவரும் தூங்க சென்றபோது அனைவருக்கும் கூல்ட்ரிங்க்ஸ்ல் மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் தானும் மதுகுடித்துவிட்டு மது போதையில் மனைவி, மகள், மகன் ஆகியோரின் கழுத்தை மரம் அறுக்கும் மெஷினால் அறுத்துக்கொலை செய்துள்ளார். பின்னர் மெஷினை தனது கழுத்தில் வைத்து அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், வீட்டில் சுவற்றில் எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்திருந்தையும் ரூ.3.5 லட்சத்துக்கான கடன் பத்திரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பிரகாஷ் - காயத்ரி திருமண நாளான நேற்று, காயத்ரியின் தந்தை திருப்பதி கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பின் இன்று காலை மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்து பார்த்தபோது தான் அனைவரும் கொலை செய்யப்பட்டு பிரகாஷ் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் குழந்தைகளுக்காக நாட்டு நாய் குட்டி ஒன்று வாங்கியுள்ளனர். அந்த நாய் தினமும் வீட்டுக்குள் இவர்களுடனே படுத்துக்கொள்ளும். ஆனால், நேற்றைய தினம் நாய் குட்டியை வீட்டுக்கு வெளிப்பக்க சுவற்றில் கட்டிப்போட்டுள்ளனர். நாய் நள்ளிரவில் குறைத்துள்ளது. ஆனால் நாய் குரைத்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்கின்றனர் அக்கம் பக்கத்தினர்.
மேலும், இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் யார்? மனைவி, மகன், மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பிரகாஷை தூண்டியது யார்? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் தொல்லையால் சென்னை பெருங்குடியில் வசித்து வந்த நபர் மனைவி, குழந்தைகளை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமத்தின் தாக்கம் குறைவதற்குள் தற்போது கடன்தொல்லையால் மனைவி, மகள், மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட மென்பொறியாளரால் சென்னை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.