பாத்ரூம் போனதுக்கு 12% GSTயா? - IRCTC கட்டணத்தால் ஷாக்கான பிரிட்டிஷ் பயணிகள்!
ரயில்வே சார்ந்த சேவைகளை பெறுவதற்கு IRCTC தரப்பில் அனைத்திற்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு வருவது பயணிகளிடையே தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. டீ. காப்பி குடிப்பதற்கும். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கும் என எல்லாவற்றுக்கும் ஜி.எஸ்.டி போடுவது அதற்கு சாட்சியாக இருக்கிறது.
இப்படி இருக்கையில், ஆக்ரா கன்ட்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் உள்ள எக்சிகியூட்டிவ் லவுஞ்சில் உள்ள கழிவறையை பயன்படுத்தியதற்காக பிரிட்டிஷ் பயணிகள் இருவருக்கு ஐஆர்சிடிசி. சார்பில் 12 சதவிகிதம் ஜி.எஸ்.டியோடு சேர்த்து 224 ரூபாய் வசூலித்தது தெரிய வந்திருக்கிறது.
பிரிட்டிஷ் தூதரகத்தில் இருந்து ஆக்ராவிற்கு ரயிலில் வந்த இருவரும் ஆக்ரா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இறங்கியிருக்கிறார்கள். அங்கு, ரயில் நிலைய வழிகாட்டியான ஸ்ரீவத்சவா என்பவரிடம் வாஷ் ரூம் குறித்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் அங்குள்ள ஓய்வறையை காட்டிருக்கிறார். அங்கு சென்று 5 நிமிடம் ஃப்ரஷ் அப் ஆகியிருக்கிறார்கள் அந்த இருவரும்.
வெளியே வந்த பிரிட்டிஷ் பயணிகளிடம் அண்ணனுக்கு பில்ல போட்டு கைல குடு என வடிவேலு காமெடியில் வருவது போல வெளியவே நின்றிருந்த ஐ.ஆர்.சி.டி. நிர்வாகி, எக்சிகியூட்டிவ் லவுஞ்ச் பாத்ரூமை பயன்படுத்தியதற்காக 12% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து தலா 112 ரூபாய் என 224 ரூபாய்க்கு ரசீதை நீட்டியிருக்கிறார்.
வெறும் 5 நிமிடம் மட்டுமே வாஷ் ரூமை பயன்படுத்தியதற்காக 224 ரூபாய் கட்டணம் வசூலிப்பது நியாயமில்லை எனச் சொல்லி அவ்வளவு பணம் கொடுக்க முதலில் அந்த பிரிட்டிஷ் பயணிகள் மறுத்திருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளின் நிர்பந்தத்தின் பேரில் கடைசில் கட்டணத்தை கட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பேசியுள்ள ஐ.ஆர்.சி.டி.சி செய்தி தொடர்பாளர் பிரஜேஷ் குமார், “எக்சிகியூட்டிவ் லவுஞ்ச் பயன்படுத்த தனியாக நுழைவுக் கட்டணம் உண்டு. ஓய்வறையில் தங்கும் போது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் இலவசமாக Wi-Fi ஐப் பயன்படுத்தலாம் மற்றும் இலவச காபியும் வழங்கப்படும்" எனக் கூறியிருக்கிறார்.
முன்னதாக டெல்லியில் இருந்து ஆக்ராவிற்கு பயணிகள் ரயிலில் வந்தாலே டிக்கெட் கட்டணம் வெறும் 90 ரூபாய்தான். ஆனால் 5 நிமிஷம் மட்டுமே கழிவறையை பயன்படுத்தியதற்காக 224 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளது ஏற்புடையதல்ல என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது