சமயபுரத்தில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம் -காவலர் சஸ்பெண்ட்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தது தொடர்பாக காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தரிடம் செல்போன் திருடியதாக முருகானந்தம் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், காவல்நிலைய கழிவறையில் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார்.
முருகானந்தம் தனது இடுப்பில் அணிந்திருந்த கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், மதுபோதைக்கு அடிமையான அவர் மீது, தாயை அடித்துக் கொன்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விசாரணை கைதி மரணமடைந்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்று திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் தெரிவித்துள்ளார். பணியில் அலட்சியமாக இருந்ததாக சமயபுரம் காவல் நிலைய காவலர் ராம்கி என்பவரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி எஸ்.பி. சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதே காவல்நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் என்ற விசாரணை கைதியை காவல்துறையினர் அடித்துக் கொன்றதாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.