நீலகிரியில் கனமழையால் மண் சரிவு ; மலை ரயில் சேவை ரத்தால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கனமழையால் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் பாதி வழியிலேயே திரும்பியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மலை ரயில் செல்லும் பாதையில் மண் சரிவுகள் ஏற்படுள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இன்று மேட்டுப்பாளையம் உதகை இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு செல்லும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் 7.10 மணிக்கு
மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளோடு ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனிடைய நேற்றிரவு மேட்டுப்பாளையம் மலையடிவார பகுதிகள் மற்றும் நீலகிரி மலைத்தொடரில் பெய்த கனமழை காரணமாக கல்லார் - ஹில்குரோ ரயில் நிலையங்களுக்கிடையே மண் சரிவுகள் ஏற்பட்டன.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நீலகிரி மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்தது. தண்டவாள பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மேட்டுப்பாளையம் உதகை இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் மலை ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.