அவசரவழி கதவு...பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி படுகாயம்
கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்து பள்ளி மாணவி படுகாயமடைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ரதிமா (10) என்பவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலையில் அந்தப் பள்ளியின் வாகனத்தில் ஊரிலிருந்து பள்ளிக்கு வந்துள்ளார்.
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் பகுதியில் வாகனம் வளைவில் திரும்பும்போது வாகனத்தின் அவசர வழி பகுதி திடீரென திறந்ததால் அப்பகுதியில் அமர்ந்திருந்த மாணவர் ரதிமா வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மாணவர்களின் கூச்சலை தொடர்ந்து உடனடியாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஆட்கொண்ட சுந்தரம் (67), மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
கோவில்பட்டி தாசில்தார் சுசிலா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் மாணவிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இது குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.