வீடியோ கால் மூலமாக மருத்துவருடன் பேசி செவிலியர்களே பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த விவகாரம்- மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
வீடியோ கால் மூலம் மருத்துவருடன் பேசி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் சிசு இறந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல்செய்ய பொதுச் சுகாதாரத்துறை இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அருகே உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தை சேர்ந்த முரளி என்பவரின் மனைவி புஷ்பா, பிரசவத்திற்காக மதுராந்தகம் அருகே உள்ள இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் மருத்துவரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி பிரசவம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதில் புஷ்பாவுக்கு பிறந்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.
இதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல்
செய்ய பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.