சமூக வலைத்தளங்களில் வாலாட்ட முடியாது' : சைபர் க்ரைம் குற்றங்களை கண்காணிக்க புதிய குழு
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் நடக்கும் குற்றங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த வருடமே திமுக ஆட்சி வந்ததும் இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதிலும் தலைவர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப கூடாது. இணையத்தில் பாலியல் ரீதியான குற்றங்களை செய்ய கூடாது. பெண்களை இழிவுபடுத்த கூடாது. இணையத்தில் மோசடி சம்பவங்களில் ஈடுபட கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் சார்பாக சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு இருந்தது.
அதேபோல் சமூக வலைத்தளங்களில் பொய்யான கருத்துக்களை பரப்ப கூடாது. அப்படி பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இதற்காக விரைவில் குழு அமைக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் குற்றங்களை தடுப்பது, தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்,. யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் தமிழ்நாட்டில் கண்காணிக்கப்படும். இதில் தவறான தகவல்கள் , பொய்யான செய்திகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள, விசாரணை நடத்த, கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்காக தமிழ்நாடு முழுக்க 37 மாவட்டங்களில் குழு அமைக்கப்பட உள்ளது. சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் சிறப்பு குழுக்கள் செயல்படும். மொத்தம் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட குழுவாக இது செயல்படும். இவர்கள் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பார்கள். இணைய வழியில் பாலியல் குற்றங்கள், பொய்யான தகவல்களை பரப்புதல், வதந்திகளை ஏற்படுத்துதல் போன்ற செயல்களுக்கு எதிராக இதில் நடவடிக்கை எடுக்கப்படும். என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்க முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவால் இந்த குழு உருவாக்கப்படுவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட இந்த அறிவிப்பிற்கு Youtube, twitter, facebook போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் உண்டாக்கி காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கவனிக்க காவல்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.