ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
இந்தியாவின் ஜிடிபியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் - IOB
August 22, 2019 • M.Divan Mydeen

அனைத்து வங்கிகளும் இணைந்து, இந்தியாவின் ஜிடிபியை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கர்ணம் சேகர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில், இந்திய நிதித்துறையின் அறிவுறுத்தல்படி தொழில் வளர்ச்சி குறித்த மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியாவிலேயே முதல்முறையாக அனைத்து வங்கியை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், எடுக்கப்பட்டுள்ள முடிவுகள், ஆலோசனைகள் ஆகியன மாநில அளவிலான வங்கி குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இந்தநிலையில், கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கர்ணம் சேகர், தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து தொழில் வளர்ச்சி குறித்தும், அதனை முன்னேற்றுவது குறித்தும் ஆலோசித்ததாக தெரிவித்தார். கூட்டத்தில் வங்கித்துறையை மேம்படுத்துவது குறித்த திட்டங்களும், இந்தியாவின் ஜிடிபியை அடுத்த 5 ஆண்டுகளில் 5ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான செயல்முறைகள் குறித்தும் ஆலோசித்ததாகவும் கர்ணம் சேகர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாகவே ஐஓபி நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவித்த அவர், வங்கியின் வாராக்கடன் விகிதம் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளில் வாராக்கடன் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் புதிய ஐஓபி வங்கி கிளைகள் திறக்க வாய்ப்பில்லை என கூறிய அவர், கடந்த ஆண்டுகளை காட்டிலும் நஷ்டம் சற்று குறைந்திருப்பதாகவும், இந்த நிதியாண்டிலும் நஷ்டத்திலிருந்து வெளிவருவதையே முதல் இலக்காக கொண்டு செயல்படுவதாகவும், ஆட்டோமொபைல் துறையின் சரிவு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.