ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
இப்படியும் ஒரு பேருந்து நடத்துநர் !
September 15, 2019 • M.Divan Mydeen

கோவையைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர், பயணிகளை கனிவுடன் வரவேற்று, பயணக்கட்டணம், பேருந்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து, அவர்களது பயணத்தை இனிமையாக்கி கவனம் பெற்று வருகிறார். பேருந்து நடத்துனர்கள், குறிப்பாக அரசுப் பேருந்து நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையிலான அன்றாட போராட்டத்தை விவரிக்கும் காட்சிகளில் ஒன்றுதான் இது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான, விதவிதமான குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களை சந்திக்கும் நடத்துனர்கள், அவர்களிடம் விதவிதமான அனுபவங்களையும் எதிர்கொள்கின்றனர். சில்லறை எடுத்து வராமல் பேருந்தில் ஏறிவிட்டு வாக்குவாதம் செய்வது, குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை அழைத்து வந்துவிட்டு, அவர்களுக்கு பயணக்கட்டணத்தில் இருந்து விலக்கு கேட்பது, குறிப்பிட்ட எடைக்கு மேல் சுமைகளை எடுத்து வந்துவிட்டு அதற்கான கட்டணம் கேட்டால் சண்டைக்கு வருவது என ஒரு சில பயணிகள் செய்யும் அட்டகாசங்கள் நடத்துனர்களுக்கு பெரும் தலைவலியாக அமையும். அதற்கு நிகராக சில நடத்துனர்களும் பயணிகளை ஒருமையில் பேசி அதட்டுவது, சிடுசிடுவென எரிந்து விழுவது என நாள்தோறும் சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறும். இந்த நிலையில், தாம் செய்யும் பணியை நேசிப்பதோடு, தனது பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு நடத்துனர் கோவை - மதுரை வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். கோவை பேரூரைச் சேர்ந்த சிவசண்முகம் ஒண்டிபுதூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் நடத்துனராகப் பணிபுரிந்து வருகிறார். கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக மதுரை வரை செல்லும் சிவசண்முகம் பணிபுரியும் அந்த அரசுப் பேருந்தில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு, அதில் பயணிகளை அன்புடன் வரவேற்கும் அவரது குரல் ஒலிக்கிறது. பேருந்தில் ஏறும் பயணிகளின் வழித்தடம் குறித்தான சந்தேகங்களுக்கு முகம் சுழிக்காமல் விளக்கம் கொடுக்கும் சிவசண்முகம், பயணிகள் ஏறி அமர்ந்தவுடன் அழகு தமிழில் வணக்கம் தெரிவிக்கிறார். தொடர்ந்து பேருந்து எந்ததெந்த ஊர் வழியாக பயணிக்கிறது, அந்தந்த ஊர்களுக்கு எவ்வளவு கட்டணம் என்பதைக் கூறும் சிவசண்முகம், உரிய சில்லறையை தருமாறு பயணிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறார். பின்னர் பேருந்துக்குள் குப்பைகளைப் போடாமல் சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார் சிவசண்முகம். பயணங்களின்போது ஒவ்வாமை காரணமாக சில பயணிகள் வாந்தியெடுப்பதை பார்த்திருப்போம். அவ்வாறு நடக்கும்போது, அந்த இருக்கை முழுவதும் அசுத்தமாகி, வேறு பயணிகள் அமர முடியாத நிலையும், மற்ற பயணிகள் முகம் சுழிக்கும் நிலையும் ஏற்படும். இதனைத் தவிர்க்கும் பொருட்டு, அத்தகைய ஒவ்வாமை பிரச்சனை கொண்ட பயணிகள் குறித்து முன்னதாகவே கேட்டறிந்து, அவர்களுக்கு புளிப்பு சுவையுடய மிட்டாய்களைக் கொடுக்கிறார். இதுபோன்ற செயல்கள் தனது மனதுக்கு ஒருவித நிறைவைத் தருவதாகக் கூறும் சிவசண்முகம், பயணிகளும் உயரதிகாரிகளும் தன்னை ஊக்குவிப்பதாகக் கூறுகிறார். “எந்த வேலையையும் கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு செய்ய வேண்டும்” என்றொரு சொலவடை உண்டு. அந்த வகையில் 1995ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து கடந்த 24 ஆண்டுகளாக தனது வேலையை விருப்பத்துடனும், ஆர்வத்துடனும், கண்ணியத்துடனும் செய்து வரும் சிவசண்முகம் போன்றோர் எல்லா துறைகளிலும் தேவைப்படுகின்றனர்.