ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
உடனடி சமையலுக்கு தயார்... வந்தது வாழைப்பூ பாக்கெட்.
September 10, 2019 • M.Divan Mydeen

ஈரோடு மாவட்டத்தில் வாழைப்பூவை உடனடியாக சமைக்கும் வகையில் சுத்தம் செய்து பாக்கெட்டுகளில், அடைத்து விற்பனை செய்யும் தொழில் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன் தானும் சம்பாதித்து அசத்தி வருகிறார் கிராமத்துப்பெண் ஒருவர். உடனடி இட்லி மாவு, சப்பாத்தி மாவு போல, உடனடி வாழைப்பூ பற்றிய செய்தி... சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமாவதி. மருத்துவ குணமிக்க வாழைப்பூவை சுத்தம் செய்து பிரித்து சமையலுக்கு பயன்படுத்துவது என்பது சிரமமானது என்பதால், இவர் நேரடியாக சமையலுக்கு பயன்படுத்தும் வகையில் வாழைப்பூவை சுத்தம் செய்து,100 கிராம் பாக்கெட்டுகளாக பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தனி ஆளாக செய்து வந்த தொழிலை விரிவுபடுத்தினார். கணவர் பூபதி குமாருடன் விவசாயிகளிடம் வாழைப்பூக்களை மொத்தமாக வாங்கி வந்து, கிராமத்தில் உள்ள பெண்கள் மூலம் சுத்தம் செய்து பாக்கெட்டுகளில் அடைக்கிறார். ஒரு நாளைக்கு 250 பாக்கெட்டுகள் வீதம், வாரத்தில் 3 நாட்களுக்கு சுமார் 750 பாக்கெட்டுகள் வரை விற்பனைக்கு அனுப்பி வருகிறார். இவரிடம் இருந்து ஒரு பாக்கெட்டை ரூபாய் 20 க்கு வாங்கிச்செல்லும் வியாபாரிகள், அதனை ரூபாய் 30 வரை விற்கிறார்கள். ஒரு வாழைப்பூவை சுத்தம் செய்து தர 5 ரூபாய் கூலியாக கொடுப்பதால், பல பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இத்தொழிலில் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுவதாகவும், கூடுதல் ஆர்டர் கிடைத்தால் தொழிலை விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.