ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
ஊனத்தையும் உயிரிழப்பையும் தடுப்போம்... இன்று உலக முதலுதவி தினம்
September 14, 2019 • M.Divan Mydeen

உலக முதலுதவி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் ஊனத்தை மட்டுமின்றி உயிரையும் காப்பாற்றக்கூடிய முதலுதவி பற்றி விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு. ஏதேனும் அசம்பாவித நிகழ்வில் சிக்கி காயம்பட்டவரையோ, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரையோ மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வதற்குள் காலம் வேகமாக ஓடி விடுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் செய்யப்படும் சிறு சிறு முதலுதவிகள் கூட மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியை ஏற்படுத்தி விடுகிறது. சாலைகளில் விபத்தில் சிக்கியவரை ஏறெடுத்தும் பாராமல் சிக்கல் வந்து விடுமோ என பயந்து சென்றால் ஒரு உயிரையோ அல்லது ஒருவரின் உடலில் ஊனம் ஏற்பட்டதற்கு நம்மை அறியாமலே நாமும் பொறுப்பாகி விடுகிறோம்.தக்க நேரத்தில் செய்யப்படும் முதலுதவிக்கு சட்டமும், காவல்துறையும் எப்போதும் துணை நிற்கும் என்று கூறுகிறார் சென்னை தேனாம்பேட்டையில் தனியார் மருத்துவமனையின் முதலுதவி பயிற்சியாளர் பிரியங்கா.விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு குறிப்பிட்ட இடத்தில் சிறிய குச்சியைக் கட்டலாம் என்று குறிப்பிடும் அவர், அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் நோட்டுப் புத்தகத்தின் அட்டையை வைத்துக்கூட கட்டுப் போடலாம் என்று தெரிவிக்கிறார். நமக்குத் தெரிந்தவரோ, சாலையில் யாரோ ஒருவர் திடீரென உணர்வின்றி செயலிழந்து போனால் முதலில் அவரின் தோள்பட்டை தட்டிக் கூப்பிட வேண்டும் என்று கூறும் முதலுதவிப் பயிற்சியாளர் வினோத், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபரைக் கிள்ளிப் பார்க்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். வயிற்றுக்கும், நெஞ்சுக்குமான இடைப்பகுதியில் நிமிடத்திகு 30 முறை என்ற கணக்கில் அழுத்தியும், பாதிக்கப்பட்டவரின் வாயில் துணியை வைத்துக் கொண்டு மூச்சுக் காற்றை கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட நபரை நிச்சயம் காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வினோத்.பேரிடர் காலத்தில் தாள முடியாத நிலையில் இருப்பவர்களை தூக்கிச் செல்லும் எளிய முறையை விவரிக்கும் தனியார் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலரான பிரபுதாஸ், சாதாரண ஃபாயில் பேப்பர் மூலம் 80 கிலோ எடையுள்ள நபரை தூக்கிச் செல்லமுடியும் என்கிறார். தாங்க முடியாத குளிரில் இருப்பவர்களை ஃபாயில் பேப்பரில் கட்டி வைத்தால், அவர்களை நிச்சயம் காப்பாற்ற முடியும் என்கிறார் உறுதியாக. ஆபத்து காலங்களில் நாம் செய்யும் சிறு சிறு முதலுதவி கூட உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதை அனைவரும் உணர்தல் அவசியம்..