ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
சன் டிவி செய்தி..சின்னதா ஒரு பிளாஷ்பேக்... அர்ப்பணிப்பே எடிட்டோரியலின் உயிர்நாடி .
July 30, 2019 • M.Divan Mydeen

செய்தி தொலைக்காட்சிகளின் எடிட்டோரியல் அறைக்கு என்றே விடப்பட்ட ஒரு சாபம் உண்டு.. வழக்கமான பரபரப்புகளையும் தாண்டி அப்பாடா, இன்றைய பணியின் முக்கியமான கட்டத்தை தாண்டிவிட்டோம் என்று கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க நினைப்போம்… அப்போதுதான் இடி மாதிரி பிரேக்கிங் தகவல் சேரும். ஏற்கனவே கஷ்டப்பட்டு தயாரித்த செய்திகளில் எதையெல்லாம் தூக்கியடிக்கவேண்டுமோ அதையெல்லாம் ஈவு இரக்கம் பார்க்காமல் கொன்றுவிட்டு புதிய பிரேக்கிங் பின்னால் ஒட்டுமொத்தமாக ஓடவேண்டிவரும்.. இப்படித்தான் 2003, அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி மாலை சுமார் ஐந்து மணிவாக்கில், சன்டிவி எடிட்டோரியல் முக்கால்வாசி செய்திகளுக்கு ஸ்ரிகிரிப்ட் வடிவத்தை தயாரித்துகொண்டு, அவற்றிற்கு விஷவல் வடிவத்தை கொடுக்கும் வேலையில் மும்முரமாக இறங்க ஆரம்பித்தது.. அந்த நேரத்தில்தான் செய்தி ஆசிரியர் ராஜா சாருக்கு போனில் வந்தது, ஒரு செய்தி. ''ஆந்திரா சீஎம் நாயுடு மேல பெரிய அளவுல அட்டாக் நடந்திருக்கு. ரத்தக்கறையோட கார்ல இருந்து சந்திரபாபு வெளியே வர்றாராம், விஷுவல் எடுத்த ரிப்போர்ட்டர் சொல்றார்'' என்று சொல்லி எடிட்டோரியலை கிறுகிறுக்க வைத்தார் எடிட்டர் . திருப்பதி-திருமலை சாலை, நச்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குல், நாயுடுவிற்கு பின்னால் வந்த அமைச்சர்களின் கார்கள் நேரடி தாக்குதலுக்கு ஆளாகி அவர்கள் படுகாயம், குண்டுவெடிப்பு அதிர்வில் முதலமைச்சர் நாயுடுவின் புல்லட் ப்ரூப் கார் தூக்கிவிசப்பட்டு உருண்டது.. ரத்தக்கறை தோய்ந்த ஆடைகளோடு காரிலிருந்து நாயுடு இறங்கிவருவது என எடிட்டோரியலுக்கு தகவல்கள் வந்தபடியே இருக்க, பரபரப்பு பல மடங்கு தொற்றிக்கொண்டது.. தகவல்களை வைத்து ஸ்கிரிப்ட் எழுதுவது எங்களுக்கு சில நிமிட வேலைதான். ஆனால் அந்த பரபரப்பு வீடியோ காட்சிகள் வேண்டுமே.. அப்போதெல்லாம் சன்டிவியை பொறுத்தவரை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே உடனே வீடியோவை எஸ்என்ஜி மூலம் வாங்கமுடியும். மற்ற இடங்களிலிருந்தெல்லாம் பஸ், அவசரம் என்றால் காரில்தான் கேசட் வரவேண்டும்… ஆக திருப்பதியிலிருந்து காரில் வீடியோவோடு வந்தாலும் ஒன்பதரை ஆகிவிடும்..எட்டு மணி செய்தியில் வெறும் செய்தியாக மட்டுமே சொல்லமுடியும். திடீர் ஒன்று மனதில் மின்னல் வெட்டியது.. இரவு எட்டு மணிக்கு செய்தி ஆரம்பித்து எட்டரை மணிக்கு முடிவதற்குள் சன் டிவியில் காட்டியே தீருவது என்று எடிட்டர் ராஜா தீர்மானித்தார். எட்டரை ஆனால் சீரியல் கோஷ்டி அலவ் பண்ணவே பண்ணாது. 24 மணிநேர நியூஸ் இருந்தாலும் எங்களின் சன்டிவி செய்தி கோஷ்டிக்கு மானப்பிரச்சினை. அதனால் எடிட்டர் ராஜா சாரிடமிருந்து உத்தரவுகள் பறந்தன. திருப்பதியில் இருந்து வீடியோ கேசட் ஒரு காரில் சென்னையை நோக்கி பறக்க ஆரம்பித்தது.. சென்னை அறிவாலயத்தில் நேரடி ஒளிபரப்பு வேன் திருப்பதியை நோக்கி சீறியது. இரண்டும் நடுவழியில் சந்தித்து, அங்கேயே கேசட்டை வாங்கி நேரடி ஒளிபரப்பு வேனிலிருந்து சன்டிவி அலுவலகத்துக்கு விஷவலை பெற்றுக்கொள்வது. எடிட்டோரியலின் ஒரே இலக்கு எட்டு மணி செய்தியில், இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன என்ற கட்டம் வருவதற்குள் பரபரப்பு காட்சிகளை காட்டியே தீரவேண்டும் என்பதுதான். வீடியோ கார் பார்ட்டி ரேணிகுண்டா என்று சொல்லும், நே.ஒ..வேன், சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்கி கிண்டி போரூர் என்று சொல்லும். கார் தரப்பு புத்தூர் நகரி என்றால் வேன் தரப்பு பூந்தமல்லிதாண்டி திருவள்ளுர்பக்கம் என்று சொல்லும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், எட்டு மணி செய்தி தொடங்கிய சில நிமிடங்களில் இரு வாகனங்களும் சந்தித்துகொள்ளும் என்பது உறுதியானது. எட்டு மணிக்கு சன் டிவியில் செய்தியும் ஆரம்பித் தது. கூடவே, அதன் மேல் ஸ்குரோலும் ஓட ஆரம்பித்தது. 'இன்னும் சில நிமிடங்களில்.. சந்திரபாபுவை திருப்பதியில் குண்டு வைத்து கொல்ல முயற்சி, படுகாயங்களோடு தப்பிய பரபரப்பான நேரடி காட்சிகள்'' இன்னொரு பக்கம் வீடியோ கேசட் டூ நே.ஒ.வேன் டூ சன்டிவி விஜுவல் ரிசீவிங் எனப்படும் நியூஸ்பூல் என காட்சிகள் பரிமாற்ற வேலைகள் நடந்தகொண்டிருந்தன. விஷவல் வாங்கி முடித்த வேளையில், விளம்பரங்கள் முடிந்து இரண்டாவது பார்ட் செய்தி ஓட ஆரம்பித்தது. எடிட் சூட்டிற்கு சந்திரபாபு நாயுடு வீடியோ கொண்டு செல்லப்பட்டு, காட்சிகளை பார்த்து எடிட் செய்யும் பணி மின்னல் வேகத்தில் நடந்தது. இரண்டாவது பார்ட் செய்தியும் விளம்பரமும் முடிந்து உலக செய்திகள் ஆரம்பமாகின. உடனே கட் செய்து ஸ்க்ரிப்ட் எழுதப்படாத, வெறும் வீடியோ தொகுப்பை செய்தியில் ஒடவிட்டார் எடிட்டர்.. திருப்பதி அடிவாரத்தில் நடந்த அந்த களேபரமான, நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகளுக்கும நாங்கள் எப்படி ஸ்கிரிட் எழுதினாலும் பொருந்துமாக இருந்திருக்குமா என்பது சந்தேகம். 16 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவங்கள் இப்போதாக்கு பெரிதாக தெரியாமல் போகலாம், ஆனால் அன்றையை தொழிற்நுட்பத்தை வைத்து செய்தவர்களுக்கு மட்டுமே அந்த உழைப்புக்கான கடினம் புரியும். மக்களை முதன் முதலில் சென்றடைவது நம் செய்தி யாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு துடிப்பும், அர்ப்பணிப்பும் எடிட்டோரியலுக்கு இருந்தால் மட்டுமே இதுபோன்ற விஷயங்கள் சாத்தியம், கூட்டு முயற்சி யில் ஒருவர் அலட்சியம் காட்டினாலும்போதும், மற்றவர்களின் மொத்த உழைப்புமே பாழாகிவிடும். ✒ ஏழுமலை வெங்கடேசன்-மூத்த பத்திரிகையாளர்