ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
டிப்டாப் உடையில் வந்து திருடிய கணவன்- மனைவி
September 18, 2019 • M.Divan Mydeen

திருச்சி மணப்பாறையில் உள்ள இரும்பு கடைக்கு, டிப்டாப் உடையில் வந்த வெளிநாட்டுத் தம்பதி கண் இமைக்கும் நேரத்தில் 17ஆயிரம் ரூபாயை நூதன முறையில் களவாடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சாலையில் இரும்பு கடை நடத்தி வருபவர் பரிஷத் அலி, இவரது கடைக்கு காரில் டிப்டாப் உடையணிந்து வெளிநாட்டை சேர்ந்த கணவன் மனைவி இருவர் வந்துள்ளனர். 40 ரூபாய்க்கு இரும்பு பொருள் வாங்கிய இவர்கள், 50 ரூபாயை கடைக்காரர் பரிஷத் அலியிடம் கொடுத்துள்ளனர். மீதம் 10 ரூபாய் கொடுத்த பரிஷத் அலியிடம், தன்னிடம் 2000 ரூபாய்க்கு 100 மற்றும் 500 ரூபாய் தாள்கள் இருப்பதாகவும், சில்லரை ரூபாய்க்கு முழு 2000 ரூபாய் தாள் கொடுக்கும்படியும் கடைக்காரர்களிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த தம்பதியிடம் சில்லரை ரூபாய்களை பெற்றுக் கொண்ட பரிசத் அலி, கல்லாவில் இருந்து 2000 ரூபாய் தாளை கொடுத்துள்ளார். அதை பெற்று கொண்ட அந்த வெளிநாட்டை சேர்ந்த கணவன், கடைக்காரர்களிடம் பேசிக் கொண்டே அந்த 2000 ரூபாய் தாளை கிழித்துவிட்டு தாள் கிழந்துள்ளதாக கடைக்காரரிடம் திரும்ப கொடுத்துள்ளார். கல்லாவில் இருந்து வேறு தாளை எடுத்த பார்த்த பரிசத் அலியிடம், ரூபாயில் சிஎல் என்று தொடங்கும் சீரியல் எண் கொண்ட தாளை கொடுக்கும்படி ஆங்கிலத்தில் கோரியுள்ளார். இதையடுத்து கல்லாவில் இருந்த அனைத்து 2000 ரூபாய் தாளையும் எடுத்து பரிசத் அலி சோதனை செய்துள்ளார். அப்போது அவரிடம் சீரியல் எண்ணை காண்பிப்பது போன்று அந்த ஆசாமி, கண் இமைக்கும் நேரத்தில் ரூபாய் கட்டில் இருந்து சில தாள்களை எடுத்து பையில் வைத்துவிட்டார். கணவரின் செயலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில், அவரது மனைவி மற்ற கடைக்காரர்களை திசை திருப்பும் செயல்களை மேற்கொண்டார். பணத்தை திருடிய பிறகு, அந்த தம்பதியினர், காரில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். அதன்பின் நோட்டுகளை எண்ணிப் பார்த்த பரிசத் அலி, கல்லாவில் இருந்து 17 ஆயிரம் ரூபாய் குறைந்ததை கண்டறிந்துள்ளார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு தாம் நூதன முறையில் ஏமாற்றப்பட்டதை அறிந்து, மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வெளிநாட்டு தம்பதியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மணப்பாறை வியாபாரிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.