ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
October 4, 2019 • M.Divan Mydeen

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு சில அரசு அதிகாரிகள் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்குவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயுத பூஜை பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இடைத்தரகர்கள் 5 பேரிடம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. 📌இதைத் தொடர்ந்து அங்கு நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேர சோதனையில், கணக்கில் வராத 86 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஒருசில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் வீராங்கன். இவர் கிராமப்பகுதிகளில் நடைபெறும் அரசு பணிகளுக்கான டெண்டர்களுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கனிடம் இருந்து, கணக்கில் வராத 1 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர்.