ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
தவறான சிகிச்சையால் தாய், சேய் பலி எனப் புகார்
September 4, 2019 • M.Divan Mydeen

கன்னியாகுமரியில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த தாயையும், சேயையும் அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தனியார் மருத்துவனை நிர்வாகம் நாடகமாடியதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூரைச் சேர்ந்தவர் விஜின். தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் அவர், தனது மனைவி மெர்லின் திவ்யாவை பிரசவத்திற்காக மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ மிஷன் என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்த்துள்ளார். இன்று காலை மெர்லின் திவ்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை மருத்துவர்கள் பிரசவ அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் கடந்ததும், மெர்லின் திவ்யாவையும், பிறந்து சில நிமிடமே ஆன சிசுவையும் யாரிடமும் சொல்லாமல் அவசர ஊர்தியில் மருத்துவர்கள் அனுப்பி வைத்ததைப் பார்த்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எங்கே அனுப்பி வைக்கிறீர்கள் என்று கேட்ட போது, உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது என்று உறவினர்கள் கூறியுள்ளனர். அவசர ஊர்தியை பின் தொடர்ந்து சென்றதாகவும், அது 300 மீட்டர் தொலைவில் உள்ள குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு, மெர்லின் திவ்யாவை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், தாயும், சேயும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், தவறான சிகிச்சையால் தாயும் சேயும் உயிரிழந்து விட்டதாகவும் இதை மறைப்பதற்காகவே தனியார் மருத்துவமனை நாடகமாடியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்திலும் அவர்கள் புகார் அளித்துள்ளனர். உரிய உபகரணங்கள் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே மனைவியும், குழந்தையும் உயிரிழந்த துக்கம் தாளாமல் விஜின் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.