ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
நெல்லை அருகே கழிவுநீர் உந்தும நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
August 8, 2019 • M.Divan Mydeen

நெல்லை அருகே சேந்திமங்கலத்தில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் உந்தும நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகராட்சி சார்பில் ரூ.290 கோடி மதிப்பில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரின் பல்வேறு இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. நெல்லை மாநகராட்சி 4வது வார்டுக்கு உள்பட்டது சேந்திமங்கலம் கிராமம். இங்குள்ள வடக்கூர் மற்றும் தெற்கூர் இடையே ஹரிஜன தொடக்கப் பள்ளி கடந்த 1960ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை ஒட்டி மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன், சுகாதார அலுவலர் அரசகுமார் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுடன் அப்பகுதிக்கு சென்று பணிகளை தொடங்க முற்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பள்ளி அருகில் கழிவுநீர் உந்தும நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சேந்திமங்கலம் ஊர் நாட்டாண்மை மணி மற்றும் பொதுமக்கள் கூறுகையில் ''எங்கள் பகுதியில் ஹரிஜன தொடக்கபள்ளி 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அருகன்குளம், அருகன்குளம் மேலூர், சேந்திமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த 21 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். எங்கள் பகுதியை சேர்ந்த குழந்தைகள் இப்பள்ளியை விட்டால் 3 கிமீ தாண்டி நெல்லை மாநகருக்குள் சென்றே கல்வி பயில வேண்டும். தேர்தல் காலத்தில் இப்பள்ளியை வாக்குச்சாவடியாக பயன்படுத்தி வருகிறோம். பள்ளி அருகில் விஏஓ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி அருகாமையில் சத்துணவுக் கூடம் முகப்பை இடித்துவிட்டு மாநகராட்சி சார்பில் கழிவுநீர் உந்தும நிலையம் அமைக்க அதிகாரிகள் பணிகளை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பணிகள் தொடங்கியபோது ஆற்று குடிநீருக்காக குழி ேதாண்டுவதாக அதிகாரிகள் எங்களை ஏமாற்றினர். ஆனால் தற்போது கழிவுநீர் உந்தும நிலையம் அமைக்க போவதாக தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் நிலையம் அமைத்தால் துர்நாற்றம் வீசும். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். விஏஓ அலுவலகத்திற்கு வருவோர் சிரமப்படுவர். எனவே கழிவுநீர் உந்தும நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக நாங்கள் ஏற்கனவே கலெக்டரிடம் 3 முறையும், மாநகராட்சி கமிஷனரிடம் 2 முறையும் மனுக்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். நெல்லை தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கிராம மக்களின் ேகாரிக்கை குறித்து விவாதிக்க மாநகராட்சி கமிஷனர் ஊரில் இல்லை என்பதால் வேறொரு நாளில் இதுகுறித்து முடிவு செய்யலாம் என கூறிவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தை ஒட்டி தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.